Published : 13 Dec 2022 02:26 PM
Last Updated : 13 Dec 2022 02:26 PM

நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 21-ம் ஆண்டு: உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலின் 21-ம் ஆண்டை ஒட்டி, தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2001-ம் ஆண்டு இதே நாளில், நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த 5 பயங்கரவாதிகள், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். எனினும், பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் 5 பேரும் கொல்லப்பட்டனர். இரு தரப்புக்கும் இடையே சுமார் 30 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்தச் சம்பவத்தின்போது நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் நாடாளுமன்றத்தில் இருந்தனர். பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதை அடுத்து, நிகழ இருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்தத் தாக்குதல் காரணமாக நாடாளுமன்றம் 40 நிமிடங்கள் முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பயங்கரவாதிகள் 5 பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய இரண்டு பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது. உள்துறை அமைச்சக வாகனங்களுக்கான அடையாள அட்டைகளை போலியாக தயாரித்து அவற்றை தங்கள் வாகனத்தில் ஒட்டி, இவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பயங்கரவாதிகள் ஓட்டி வந்த கார், அவர்கள் பயன்படுத்திய செல்போன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு உதவிய முகம்மது அப்சல் குரு, சவுகத் ஹுசைன் குரு, சவுகத் ஹுசைன் குருவின் மனைவி அஃப்சன் குரு, டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் கிலானி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அப்சன் குருவை விடுவித்தது. மற்ற மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேல்முறையீட்டு வழக்கில் கிலானியை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2003-ம் ஆண்டு விடுவித்தது. மற்றொரு மேல்முறையீட்டு வழக்கில் சவுகத் ஹுசைன் குருவுக்கான தண்டனையை உச்ச நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத்தண்டனையாக குறைத்தது. கடந்த 2013ம் ஆண்டு திகார் சிறையில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு, அங்கேயே அவரது உடல் புதைக்கப்பட்டது.

இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த 9 பேருக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்பட பலரும் உயிர்த் தியாகம் செய்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x