2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க வேண்டும்: மாநிலங்களவையில் பாஜக எம்.பி. வலியுறுத்தல்

2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க வேண்டும்: மாநிலங்களவையில் பாஜக எம்.பி. வலியுறுத்தல்
Updated on
1 min read

புதுடெல்லி: நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை படிப்படியாக புழக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று, பாஜக எம்.பி. சுஷில் குமார் மோடி மாநிலங்களவையில் வலியுறுத்தி உள்ளார்.

2016 நவம்பர் 8-ம் தேதி இரவு, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம், நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தில் 86 சதவீதம் திரும்பப் பெறப்பட்டது. இதற்குப் பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டன.

இந்நிலையில், 2017 மார்ச் 31-ம் தேதி புள்ளிவிவரத்தின்படி, நாட்டின் மொத்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 50.2 சதவீதமாக இருந்தது. 2020-ம் ஆண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தியது.

இதையடுத்து, கடந்த மார்ச் 31-ம் தேதி புள்ளிவிவரத்தின்படி, நாட்டின் மொத்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 2000 நோட்டுகளின் மதிப்பு 13.8 சதவீதமாக உள்ளது.

இந்த நிலையில், மாநிலங்களவையில் நேற்று பாஜக எம்.பி. சுஷில் குமார் மோடி பேசியதாவது: மூன்று ஆண்டுகளுக்கு முன்பே 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது. இவை ஏடிஎம் மையங்களிலும் விநியோகம் செய்யப்படவில்லை. 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

பெரும்பாலும் 2000 ரூபாய் நோட்டுகள் பதுக்கப்பட்டு உள்ளன. போதைப் பொருள், சட்டவிரோத பணப் பரிமாற்றம் ஆகியவற்றுக்கு இந்த ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. 2000 ரூபாய் என்றாலே கருப்புப் பணம் என்றுதான் கருதப்படுகிறது.

2 ஆண்டுகள் அவகாசம்: எனவே, நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை படிப்படியாக புழக்கத்தில் இருந்து நீக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள பொது மக்களுக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in