

காந்திநகர்: இரண்டாவது முறையாக குஜராத் முதல்வராக இன்று (டிச.12) பதவியேற்றார் பூபேந்திர படேல். இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி பங்கேற்பு: குஜராத் முதல்வராக இரண்டாவது முறையாக பூபேந்திர படேல் பதவியேற்கும் விழா தலைநகர் காந்திநகரில் இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் உள்பட பலர் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். பூபேந்திர படேலின் குடும்பத்தினரும் விழாவில் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு: சுமார் 2 மணி அளவில் பதவி ஏற்பு விழா தொடங்கியது. அப்போது, குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் முதல்வராக பதவி ஏற்றார். ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து, ஷர்ஷ் சங்கவி, ஜகதீஷ் விஸ்வகர்மா, நரேஷ் படேல், பச்சுபாய் கபாத், பர்ஷோத்தம் சோலங்கி உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
தேர்தல் வெற்றி: குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 என இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பாஜக 156 தொகுதிகளில் வெற்றி பெற்றது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு கட்சியும் இத்தனைத் தொகுதிகளில் வெற்றி பெற்றதில்லை. வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை பெற்றதை அடுத்து, வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத்-ஐ சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.