

கேரள மாநிலம் புத்தூர் ஷீலா கொலை வழக்கு குற்றவாளியின் தண்டனையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பாலக்காடு புத்தூரில் கடந்த 2010-ம் ஆண்டு நடந்த ஷீலா கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டப்பகலில் மூன்று பேர் வீட்டில் நுழைந்து ஷீலா ஜெயகிருஷ்ணன் என்பவரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். அவரது தாய் கார்த்தியாயினி அம்மாள் காயங்களுடன் உயிர் தப்பினார்.
இக்கொலை வழக்கில் சம்பத், கனகராஜ், மணிகண்டன் ஆகிய மூவர் மீது குற்றம் சாட்டப் பட்டது. போலீஸ் பாதுகாப்பில் இருந்தபோது சம்பத் உயிரிழந்தார். மணிகண்டன் விடுதலை செய்யப்பட்டார். கனகராஜுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
இதை எதிர்த்து கனகராஜ், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதில் ஆயுள் தண் டனையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரினார். இம்மனு நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாத்யாய், ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த வழக்கில் சாட்சிகள் அளித்துள்ள வாக்குமூலத்தை நம்பாமல் இருப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. தண்டனை குறைக்கப்பட்டதற்காக குற்ற வாளி கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்’’ என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.