இமாச்சல் முதல்வராக சுக்விந்தர் சிங் சுக்கு பதவியேற்பு: முகேஷ் அக்னி ஹோத்ரி துணை முதல்வர்

முதல்வராக ஆக வாக்குறுதி ஏற்கும் சுக்விந்தர் சிங் சுக்கு
முதல்வராக ஆக வாக்குறுதி ஏற்கும் சுக்விந்தர் சிங் சுக்கு
Updated on
1 min read

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் 15-வது முதல்வராக சுக்விந்தர் சிங் சுக்கு (58), துணை முதல்வராக அக்னி ஹோத்ரி (60) நேற்று பதவி ஏற்றனர்.

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வென்றது. பாஜவுக்கு 25 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக சிம்லாவில் நடந்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், மேலிடத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங்கை முதல்வராக தேர்வு செய்ய புதிய எம்எல்ஏக்களிடம் போதிய ஆதரவு இல்லை. இதையடுத்து, மாநில பிரச்சாரக் குழுத் தலைவரான சுக்விந்தர் சிங் சுக்குவை முதல்வராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்கு மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தங்கியிருந்த ஓட்டலை அவர் முற்றுகையிட்டு, கோஷம் எழுப்பினார். காங்கிரஸ் மேலிடத் தலைவர்களில் ஒருவரான, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஸ்பாகெல் காரையும் மறித்து, தனதுஎதிர்ப்பை தெரிவித்தார்.

தனது கணவரும், முன்னாள் முதல்வருமான வீரபத்ர சிங் பெயரைக் கூறி தேர்தலில் வென்ற பின்னர், அவரது குடும்பத்தினரை ஒதுக்குவது மோசமானது எனவும், தன்னை தேர்வு செய்யாவிட்டால், தனது ஆதரவாளரான முகேஷ் அக்னி ஹோத்ரியை முதல்வராக தேர்வு செய்யுமாறும் பிரதிபா சிங் கூறினார்.

பின்னர், அவரை சமாதானப்படுத்தும் வகையில், முகேஷ் அக்னிஹோத்ரியை துணை முதல்வராக்க முடிவு செய்யப்பட்டது.

சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் நேற்று எளிமையான முறையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்வராக சுக்விந்தர் சிங் சுக்கு, துணை முதல்வராக அக்னி ஹோத்ரி ஆகியோருக்கு, இமாச்சல் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

பஸ் டிரைவரின் மகன்

முதல்வராகப் பதவியேற்றுள்ள சுக்விந்தர் சிங் சுக்கு, ஹமிர்புர் மாவட்டம் நடான் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராவார். இவர் சட்டப்பேரவைக்கு 4 முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார். பஸ் டிரைவரின் மகனான சுக்விந்தர் சிங் சுக்கு,இமாச்சல் பிரதேச பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் இருந்தே அரசியலில் ஈடுபட்டார். இந்திய தேசிய மாணவர் யூனியன், இளைஞர் காங்கிரஸிலும் இவர் இருந்துள்ளார்.

2013 முதல் 2019 வரை காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். இமாச்சல் பிரதேச தேர்தல் பிரசாரக் குழுவுக்கு இவர் தலைமை வகித்து சிறப்பாக வழிநடத்தியதால், பிரதிபா சிங்கின் செல்வாக்கையும் மீறி, இவரை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in