

ஸ்ரீநகர்: கடந்த 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆஷிக் நெங்ரூ. ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் கமாண்டராக செயல்பட்டு வருகிறார். இவரது வீடு ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் ராஜ்போராவிலுள்ள நியூ காலனியில் அமைந்துள்ளது. இவரது வீட்டை நேற்று போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட நிர்வாகத்தார் இடித்து அகற்றினர்.
கடந்த ஏப்ரல் மாதம், தேடப்படும் தீவிரவாதியாக ஆஷிக் நெங்ரூவை மத்திய அரசு அறிவித்தது. மேலும், பாகிஸ்தானில் செயல்படும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் உத்தரவுப்படி ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு ஏற்பாடுகளை செய்து வருவதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
வீடு இடிக்கப்பட்டது குறித்து புல்வாமா மாவட்்ட போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “சில ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருந்த காலத்தில் இந்த 2 மாடி கட்டிடத்தை ஆஷிக் கட்டியுள்ளார். மேலும் இந்த இடத்தை சட்டவிரோதமாக மற்றொருவரிடமிருந்து அவர் பறித்துள்ளார். எல்லை தாண்டியும் அவர் பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டிருந்தார்" என்றார்.
இதனிடையே ஆஷிக் வீட்டை இடித்ததற்கு, தீவிரவாத அமைப்பான தி ரெசிஸ்டென்ஸ் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் வீட்டை இடித்த அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுக்கு அந்த அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது