

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியதாவது. குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. அதேநேரம் இமாச்சல் தேர்தல், டெல்லி மாநகராட்சித் தேர்தலில் அந்த கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது.
இமாச்சலில் மிக குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதாக பாஜக கூறி வருகிறது. இது சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல் கிடையாது. ஒவ்வொரு தொகுதிவாரியாக வாக்குகளை கணக்கிட்டு பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த மாநிலத்தின் வாக்கு சதவீதத்தை கணக்கிடுவது தவறு.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியால் 33 தொகுதிகளில் காங்கிரஸின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்பட்டது. கோவா, உத்தராகண்ட் மாநிலங்களைத் தொடர்ந்து குஜராத்திலும் காங்கிரஸின் வெற்றியை ஆம் ஆத்மி சீர்குலைத்துள்ளது. டெல்லி, பஞ்சாபை தவிர்த்து இதர மாநிலங்களில் அந்த கட்சிக்கு செல்வாக்கு கிடையாது.
வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது மத்தியில் பாஜக அல்லாத அரசு பதவியேற்க காங்கிரஸே மையப்புள்ளியாக இருக்க முடியும். எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவது கடினம். எனினும் காங்கிரஸ் பொறுமை, தாழ்மையுடனும் இதர எதிர்க்கட்சிகள் உண்மையை உணர்ந்தும் செயல்பட்டால் கூட்டணி சாத்தியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.