

கொல்கத்தா: வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. காலிறுதிப் போட்டிகள் முடிந்த நிலையில் வரும் 13, 14 தேதிகளில் அரையிறுதி போட்டியும் வரும் 18-ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளது.
உலக அளவில் கால்பந்து போட்டிக்குதான் ரசிகர்கள் அதிகம். இந்தியாவைப் பொருத்தவரை மேற்கு வங்க மாநிலத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தலைநகர் கொல்கத்தாவிலிருந்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கால்பந்து போட்டிகளைப் பார்ப்பதற்காக கத்தார் சென்றுள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.
இதுகுறித்து இந்திய சுற்றுலா முகவர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் (கிழக்கு பிராந்தியம்) அனில் பஞ்சாபி கூறும்போது, “கால்பந்து போட்டிகளைப் பார்க்க, நாட்டின் கிழக்குப் பகுதியிலிருந்து சுமார் 12 ஆயிரம் பேர் கத்தார் சென்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக 9 ஆயிரம் பேர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள். போட்டிகள் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டபோதிலும், கத்தார் பயண விவரங்களை கால்பந்து ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். எனவே, கொல்கத்தாவிலிருந்து மேலும் சுமார் 1,500 பேர் கத்தார் செல்வார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
கால்பந்து ஜாம்பவானாக விளங்கும் பிரேசில் மற்றும் போர்ச்சுகல் ஆகியவை போட்டியிலிருந்து வெளியேறிவிட்டன. ஆனாலும், அர்ஜென்டினா அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளதால், கொல்கத்தா ரசிகர்கள் கத்தார் செல்ல விரும்புவதாகக் கூறப்படுகிறது.