Last Updated : 12 Dec, 2022 09:21 AM

 

Published : 12 Dec 2022 09:21 AM
Last Updated : 12 Dec 2022 09:21 AM

பாரதியார் குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர், ஆளுநர்: முதன்முறையாக தமிழகத்திற்கு வெளியே நாடு முழுவதிலும் விழா

கோப்புப்படம்

புதுடெல்லி: தமிழகத்திற்கு வெளியே முதன் முறையாக பாரதியாரின் 141 ஆவது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதுவரை இல்லாத வகையில், மகாகவி சுப்பிரமணிய பாரதியா ரின் 141 ஆவது பிறந்த நாள்நாடு முழுவதிலும் கொண்டாடப் பட்டுள்ளது. உத்தர பிரதேசம் வாரணாசியில் பாரதி வாழ்ந்த வீட்டிற்கு நேற்று காலை மத்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சென்று, பாரதியின்சகோதரி மகன் கே.வி.கிருஷ்ணனுக்கு (97) பொன்னாடை போர்த்தினார். அவரது குடும்பத்தாரிடம் பாரதியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம், கே.வி.கிருஷ்ணன் கூறும்போது, ‘‘முதன்முறையாக பாரதியின் பிறந்தநாளை மத்திய, மாநில அரசுகளே வாரணாசியில் விமரிசையாகக் கொண்டாடுவது மகிழ்ச்சி. மகாகவி பாரதியாரை பெருமைப்படுத்தும் வகையில் நம் பிரதமர் உங்களை இங்கு அனுப்பி கவுரவப்படுத்தியதும் பெருமை அளிக்கிறது’’ என நெகிழ்ந்தார்.

இதை தொடர்ந்து மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனும் பாரதி வீட்டிற்கு நேரில் வந்து கே.வி.கிருஷ்ணண் உள்ளிட்ட அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கு பொன்னாடை போர்த்தியதுடன், சிறிது நேரம் அமர்ந்து பேசி மகிழ்ந்தார். வாரணாசியின் ஆட்சியரான தமிழர்எஸ்.ராஜலிங்கமும் பாரதி வீட்டிற்கு வந்திருந்தார். இந்த அனைவருமே முன்னதாக அனுமர் படித்துறையில் நுழைவு வாயிலில் அமைந்த பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கி மரியாதை செலுத்தினர்.

விழாக்கோலம்

பாரதி வாழ்ந்த வீட்டின் ஒரு சிறிய அறையில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட பாரதி நினைவகம் முதல்வர் ஸ்டாலினால் நேற்று துவக்கி வைக்கப்பட்டிருந்தது. இதை காணவும் காசி தமிழ் சங்கமம் வந்த தமிழர்களுடன் உ.பி.வாசிகளும் திரண்டு வந்தனர். இதனால், பாரதி வீடு அமைந்த அனுமர் படித்துறை பகுதி நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.

இதனிடையே, உபி தலைமைசெயலாளர் தேவேஷ் சதுர்வேதி,அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் நேற்று முன்தினம் ஒரு அறிவிக்கை அனுப்பினார்.

அதன்படி, ‘ஆஸாதிகா அம்ரித் மஹோத்ஸவ்’ சார்பில் சுதந்திரப்போராட்ட வீரர்களில் ஒருவரான பாரதி பிறந்தநாளை உ.பி.யின் 75 மாவட்டங்களிலும் முதன்முறையாகக் கொண்டாடப் பட்டது. அரசு சார்பிலான இந்த விழாவின் பெரும்பாலான மேடைகளின் முக்கிய விருந்தினர்களாக உபியில் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றும் தமிழர்கள் இருந்தனர்.

இவர்களில் ஒருவரான உபியின் மிர்சாபூர் மண்டல ஆணையரான கரூரை சேர்ந்த பி.முத்துகுமாரசாமி ஐஏஎஸ் ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, ‘தமிழகத்திற்கு வெளியே முதன்முறையாக கொண்டாடப்படும் பாரதி பிறந்தநாளில் கலந்துகொண்டு பேசியது மகிழ்ச்சியை அளிக்கிறது’’ என்றார்.

பாரதியின் பிறந்தநாளை மத்தியகல்வித்துறை அமைச்சகம் சார்பில்இனி வருடந்தோறும் ‘தேசிய மொழிகள் தினம்’ எனக் கொண்டாடப்படஉள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக, நாட்டின் அனைத்து மாநிலங் களிலும் பாரதியாரின் பிறந்தநாள் முதன் முறையாக, மொழிகள் தினம் பெயரில் கொண்டாடப்பட்டது.

இந்த மொழிகள் தினத்தை, வாரணாசியின் பனராஸ் இந்து பல்கலைகழகத்தில் நடைபெற்று வரும், காசி தமிழ் சங்கமத்திலும் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், அனுராக் தாக்குர், எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். மணிப்பூர் ஆளுநரான இல.கணேசன், பாரதி குடும்பத்தினரை மேடைக்கு அழைத்து பொன்னாடை போர்த்தி கவுரவப் படுத்தினார்.

இதில் பாரதி சகோதரியின் பேரன் ரவிகுமார், மகள்களான ஜெயந்தி முரளி, ஆனந்தி மற்றும் அவரது கணவர் நிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான பாரதியார் பிறந்தநாள் உ.பி.யின் 75 மாவட்டங்களிலும் முதன் முறையாகக் கொண்டாடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x