

உச்ச நீதிமன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக ஜெகதீஷ் சிங் கேஹர் வரும் ஜனவரி 4-ம் தேதி பதவியேற்க உள்ளார். அவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குரின் பதவிக் காலம் வரும் ஜனவரி 4-ம் தேதி நிறைவடைகிறது. அவருக்கு அடுத்து புதிய தலைமை நீதிபதியாக ஜெகதீஷ் சிங் கேஹரை மத்திய அரசு அண்மையில் நியமனம் செய்தது.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவருக்கும் மத்திய அரசு தனது பரிந்துரையை அனுப்பியது. இந்தப் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று அதிகாரபூர்வமாக ஒப்புதல் அளித்தார்.
இதைத் தொடர்ந்து வரும் ஜனவரி 4-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக ஜெகதீஷ் சிங் கேஹர் பதவியேற்க உள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை கேஹர் பதவியில் நீடிப்பார்.
டி.எஸ். தாக்குர் ஓய்வு பெற்ற பிறகு புதிய தலைமை நீதிபதி கேஹர் தலைமையில் கொலிஜியம் இயங்கும். இதில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி.லோகுர் ஆகியோர் இடம்பெறுவார்கள்.