Published : 09 Dec 2022 04:41 PM
Last Updated : 09 Dec 2022 04:41 PM
ஷிம்லா: நடந்து முடிந்த இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரே ஒரு பெண் மட்டுமே சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
68 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று (டிச. 8) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் கவனிக்கத் தக்க பல்வேறு விஷயங்கள் வெளிப்பட்டுள்ளன. அவை:
ஒரே ஒரு பெண் உறுப்பினர்: இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜக 25 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. சுயேட்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 68 சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே பெண் உறுப்பினர். இந்தத் தேர்தலில் பாஜக 6 பெண் வேட்பாளர்களை நிறுத்தியது. காங்கிரஸ் 5 பெண் வேட்பாளர்களையும், ஆம் ஆத்மி 3 பெண் வேட்பாளர்களையும் நிறுத்தின. இவர்களில் ரீனா காஷ்யப் என்ற ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். பாஜக சார்பில் பச்சாத் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர் இவர்.
இந்தத் தேர்தலில், வாக்களித்த வாக்காளர்களில் 49% பேர் பெண்கள். இருந்தும் ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே தேர்வாகி இருப்பதுதான் பெரும் சோகம். கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில் 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவைவிட காங்கிரஸ் பெற்ற கூடுதல் வாக்கு விகிதம் 0.90: இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ள காங்கிரஸ் பெற்ற வாக்கு 43.90 சதவீதம். 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்த பாஜக பெற்ற வாக்கு 43 சதவீதம். இரு கட்சிகளுக்கும் இடையேயான வித்தியாசம் 0.90 சதவீதம் மட்டுமே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT