

தெலங்கானாவில் சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து 46 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், சங்கா ரெட்டி மாவட்டம், ராமசந்திராபுரம் பகுதியில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்துக்கு நேற்று வந்த 5 பேர் கொண்ட குழு தங்களை சிபிஐ அதிகாரிகள் என அங்கிருந்த ஊழியர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டது. பின்னர் சோதனைக்காக லாக்கரை திறக்கும்படி கேட்டுள்ளது. இதற்கு ஊழியர்கள் மறுக்கவே, கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என 5 பேரும் எச்சரித்துள்ளனர். இதனால் அச்சமடைந்த முத்தூட் ஊழியர்கள் லாக்கரை திறந்து காண்பித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து 5 பேரும் லாக்கரில் இருந்த நகைகளை அள்ளி தங்களுடன் கொண்டு வந்த பைகளில் நிரப்பினர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் நகைகளை ஏன் எடுக்கிறீர்கள் என கேள்வி கேட்டனர். அப்போது கத்தியை காட்டி மிரட்டிய அந்த கும்பல், ஊழியர்கள் அனைவரையும் கழிவறையில் அடைத்து விட்டு தங்க நகைகளுடன் காரில் தப்பிச் சென்றது.
பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற போலீஸார் கழிவறையில் அடைக்கப்பட்டிருந்த ஊழியர்களை மீட்டனர். விசாரணையில் வந்தவர்கள் கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து லாக்கரில் இருந்த 46 கிலோ தங்கத்தை அள்ளிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
கொள்ளை போன தங்க நகைகளின் மதிப்பு சுமார் ரூ.12 கோடி என போலீஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர். மேலும் ஹைதராபாத்-மும்பாய், ஹைதராபாத்-கர்நாடகா உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனத் தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.