Published : 09 Dec 2022 07:03 AM
Last Updated : 09 Dec 2022 07:03 AM

உ.பி. மக்களவை இடைத் தேர்தலில் டிம்பிள் யாதவ் வெற்றி - ராம்பூர் தொகுதியை முதல் முறையாக கைப்பற்றிய பாஜக

உ.பி.யின் மெயின்புரி மக்களவை தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட டிம்பிள் வெற்றி பெற்றார். அவர் தனது வெற்றிச் சான்றிதழை காட்டுகிறார். அருகில் அவரது கணவரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் உள்ளார்.படம்: பிடிஐ

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி மக்களவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட டிம்பிள் யாதவ் 2 லட்சத்து 88 ஆயிரத்து 461 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஐந்து மாநிலங்களில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், ஒரு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. உத்தர பிரதேசத்தில் மெயின்புரி மக்களவை தொகுதிக்கும், ராம்பூர் மற்றும் கதாலி சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், ஒடிசாவில் பதம்பூர், ராஜஸ்தானில் சர்தார்சாகர், பிஹாரில் குர்ஹானி, சத்தீஸ்கரில் பானுபிரதாப்பூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.

உத்தர பிரதேம் மெயின்புரி தொகுதியில் சமாஜ்வாதி எம்.பி.யாக இருந்த முலாயம் சிங் யாதவ் சமீபத்தில் இறந்தார். இதனால் அவரது தொகுதிக்கு கடந்த 5-ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. மாமனார் தொகுதியில், அவரது மருமகளும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிட்டார்.

நேற்று காலை இங்கு வாக்குஎண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே முன்னிலையில் இருந்து வந்த டிம்பிள் யாதவ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரகுராஜ் சிங் சக்யாவை விட 2,88,461 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

இந்த வெற்றி குறித்து டிம்பிள் யாதவ் கூறுகையில், ‘‘இந்த வெற்றிக்காக பாடுபட்ட சமாஜ்வாடி கட்சி ஆதரவாளர்களுக்கு நன்றிதெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்த மெயின்புரி மக்களுக்கும் நன்றி. இந்த வெற்றி மறைந்த முலாயம் சிங் யாதவுக்கு செலுத்தும் புகழஞ்சலி’’ என்றார்.

உத்தர பிரதேசம் ராம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் ஆகாஷ் சக்சேனா, சமாஜ்வாதி வேட்பாளர் அசிம் ராஜாவை 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். இத்தொகுதியை பாஜக முதல் முறையாக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தொகுதி சமாஜ்வாதி மூத்ததலைவர் அசம் கானின் கோட்டையாக இருந்து வந்தது. வெறுப்பு பேச்சு வழக்கில் சிக்கி, அவர் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், அவர் எம்எல்ஏ பதவியில்இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து இத்தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கதாலி தொகுதியில் ராஷ்ட்ரிய லோக் தள கட்சியின் வேட்பாளர் மதன் பையா , பாஜக வேட்பாளர் ராஜ்குமார் சைனியை வென்றார்.

ராஜஸ்தானின் சர்தார்சாகர், சத்தீஸ்கரின் பானுபிரதாப்பூர் தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. ஒடிசாவின் பதம்பூர் தொகுதியில் பிஜு ஜனதா தளம் வென்றது. பிஹாரின் குர்ஹானி தொகுதியை பாஜக தக்கவைத்துக் கொண்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சர்தார்சாகர் சட்டப்பேரவை தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அனில் சர்மா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அசோக் குமாரை வென்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட், ‘‘தனது அரசின் சிறந்தநிர்வாகத்துக்கும், நலத் திட்டங்களுக்கும் மக்கள் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் ராஜஸ்தான் 2023-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும், காங்கிரஸ் கட்சி முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்பது தெளிவாக தெரிகிறது.

சிவபால் யாதவ் கட்சி இணைப்பு

சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகிய சிவபால் யாதவ் பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தார். மெயின்புரி தொகுயை சமாஜ்வாதி மீண்டும் கைப்பற்றியதையடுத்து, தனது கட்சியை சிவபால் யாதவ் சமாஜ்வாதியுடன் நேற்று இணைத்தார். அவரது காரில் இருந்த பிரகதிஷீல் கட்சி கொடியை அகற்றிவிட்டு, அதில் சமாஜ்வாதி கட்சி கொடியை அகிலேஷ் யாதவ் மாட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x