Published : 09 Dec 2022 03:50 AM
Last Updated : 09 Dec 2022 03:50 AM

182 தொகுதிகளில் 156-ல் வென்று வரலாற்று சாதனை - குஜராத்தில் 7-வது முறையாக பாஜக ஆட்சி

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வரலாறு காணாத வகையில் 156 தொகுதிகளில் வென்று, 7-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸுக்கு 17, ஆம் ஆத்மிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த 1, 5-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், 64.3 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த தேர்தலைவிட 4 சதவீதம் குறைவாகும். நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் 37 இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. சிறிது நேரத்திலேயே பாஜகவின் வெற்றி உறுதியானது.

பாஜக மூத்த தலைவரும், முதல்வருமான பூபேந்திர படேல், கட்லோடியா தொகுதியில் 2.12 லட்சம் வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் அமி யாஜ்னிக்கு 21,000, ஆம் ஆத்மி வேட்பாளர் விஜய் படேலுக்கு 15,000 வாக்குகள் கிடைத்தன.

சுமார் 1.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பூபேந்திர படேல் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாஜக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தேர்தலில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. குஜராத்தின் வளர்ச்சிப் பயணம் தொடரும்" என்றார்.

ராஜ்கோட் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தர்ஷிதா ஷா 53,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது பிரதமர் மோடி ஏற்கெனவே போட்டியிட்ட தொகுதியாகும்.

மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 156 தொகுதிகளைக் கைப்பற்றி, வரலாறு காணாத வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஏற்கெனவே 6 முறை ஆட்சி அமைத்திருக்கும் பாஜக, தற்போது 7-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

1995 முதல் குஜராத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதும், காங்கிரஸ் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சி 78 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், தற்போதைய தேர்தலில் காங்கிரஸுக்கு 17 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 10 சதவீத இடங்களைப் பெறும் கட்சிக்கே எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். காங்கிரஸுக்கு மிகக் குறைவான இடங்களே கிடைத்திருப்பதால், குஜராத் சட்டப்பேரவை யில் காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காது" என்றனர்.

தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரகு சர்மா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், மாநிலத் தலைவர் ஜெகதீஷ் தாக்கோரும் பதவி விலகுவார் என்று கூறப்படுகிறது.

குஜராத் தேர்தலில் பாஜக, காங்கிரஸுக்கு இணையாக களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சி, 182 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது. எனினும், அந்தக் கட்சிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட இசுகான் காத்வி, கேம்பாலியா தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹர்தாஸ்பாய் பெரா 77,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இசுவான் காத்விக்கு 58,000 வாக்குகள் கிடைத்தன.

தேசிய அங்கீகாரம்: இந்த தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி அடைந்திருந்தாலும் அந்த கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் கிடைக்க உள்ளது. ஒரு கட்சி, தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெற குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். டெல்லி, பஞ்சாப், கோவா மாநிலங்களைத் தொடர்ந்து, குஜராத்திலும் ஆம் ஆத்மி கணிசமான வாக்கு சதவீதத்தைப் பெற்றிருப்பதால், அதற்கு தேசிய அங்கீகாரம் கிடைக்க உள்ளது.

குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு 52.5 சதவீதம், காங்கிரஸுக்கு 27.3 சதவீதம், ஆம் ஆத்மிக்கு 12.9 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. 128 ஆம் ஆத்மி வேட்பாளர்கள், 44 காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

12-ம் தேதி பதவியேற்பு: குஜராத் பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் கூறும்போது, “குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இமாலய வெற்றியைப் பெற்றிருக்கிறது. வரும் 12-ம் தேதி பூபேந்திர படேல் தலைமையில் பாஜக அரசு பதவி ஏற்கிறது" என்றார். குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 2-வது முறையாகப் பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x