வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் - உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக முதல்கட்ட விசாரணை தொடக்கம்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் - உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக முதல்கட்ட விசாரணை தொடக்கம்
Updated on
1 min read

மும்பை: மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக அவரும், அவரது குடும்பத்தினரும் சொத்துகளை வாங்கிக் குவித்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு முகமைகள் விசாரணை நடத்தி உண்மையை வெளிகொணர வேண்டும் என மும்பையைச் சேர்ந்த ஆர்வலர் கவுரி பிடே மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இவரது மனு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீரஜ் தாக்குர் மற்றும் வால்மீகி மினிசஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மகாராஷ்டிர அரசு வழக்கறிஞர் அருணா காமத் பாய் ஆஜராகி, “உத்தவ் தாக்கரே சொத்து குவிப்பு தொடர்பாக மும்பை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, உத்தவ் தாக்கரே, அவரது மனைவி ராஷ்மி தாக்கரே மற்றும் அவர்களது மகன் ஆதித்ய தாக்கரே சார்பில் ஆஜரானவழக்கறிஞர்கள் சினோய் மற்றும்அசோக் முந்தர்கி, "இந்த பொதுநல மனு எந்தவித அடிப்படை முகாந்திரமும் இன்றி தொடரப்பட்டுள்ளது. எனவே, உண்மைக்குப்புறம்பான இந்த பொதுநல மனுவை ரத்து செய்ய வேண்டும்" என்று வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பொது நல வழக்கு தொடர்பான உத்தரவை ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.

கரோனா ஊரடங்கின் போதுஒட்டுமொத்த அச்சு ஊடகத்துறையும் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. ஆனால், உத்தவ் தாக்கரேவின் பிரபோதான் பிரகாசன் நிறுவனம் மட்டும் அபரிமிதமாக ரூ.42கோடி விற்றுமுதலையும், ரூ.11.5 கோடி லாபத்தையும் கணக்குகாட்டியுள்ளது. அப்போது பதவியிலிருந்த அவர் பதுக்கிய கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றியதாக புகார் எழுந்துள்ளது. இதுதவிர, தாக்கரே குடும்பத்தினர் தங்களுக்கு நெருக்கமானவர்கள் பெயரிலும் ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in