

புதுடெல்லி: மாநிலங்களவையில் முக்கிய பிரச்சினைகள் குறித்து கருத்து கூறமூத்த எம்.பி.க்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜெகதீப் தன்கர் உறுதி அளித்தார்.
புதிய குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்ந்தெடுக்கப்படார். குடியரசு துணைத் தலைவரே மாநிலங்களவையின் தலைவரும் ஆவார்.
இதையொட்டி மாநிலங்களவையில் நேற்று உறுப்பினர்கள் தங்களின் புதிய அவைத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது,“சட்டங்கள் மற்றும் தேச முக்கியத்துவம் கொண்ட பிரச்சினைகளில் அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்று சில எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டனர்.
இதற்கு ஜெகதீப் தன்கர் கூறும்போது, “இந்த இருக்கை மீது நம்பிக்கை வையுங்கள், இந்த இருக்கை பாகுபாடு காட்டாது. முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, மன்மோகன் சிங் ஆகியோர் இந்த அவையின் உறுப்பினர்களாக உள்ளனர்.
முக்கிய பிரச்சினைகளில் அவர்களின் கருத்து ஒட்டுமொத்த நாட்டுக்குமான தகவலாக இருக்கும். இவர்கள் கருத்து கூற விரும்பினால் உடனே அனுமதிப்பேன். பிறகு தான் அவை விதிகளை பார்ப்பேன். ஜெய்ராம் ரமேஷ்(காங்கிரஸ்) போன்ற மூத்த எம்.பி.க்களும் தங்கள் கருத்தை தெரிவிக்க போதிய கால அவகாசம் வழங்கப்படும். அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என்றார்.