Published : 08 Dec 2022 02:41 PM
Last Updated : 08 Dec 2022 02:41 PM

டிச.12-ல் குஜராத் முதல்வராக மீண்டும் பதவியேற்கிறார் பூபேந்திர படேல்

முதல்வர் பூபேந்திர படேலுக்கு இனிப்பு வழங்கிய பாஜக மாநில தலைவர் சி.ஆர்.பாடீல்

அகமதாபாத்: குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் வரும் 12-ம் தேதி பதவியேற்பார் என பாஜக அறிவித்துள்ளது.

குஜராத் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு 92 தொகுதிகள் தேவை எனும் நிலையில், மதியம் 2 மணி நிலவரப்படி அக்கட்சி 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது; 140 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம் அக்கட்சி 157 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடிய நிலையில் உள்ளது. பாஜகவின் இந்த மகத்தான வெற்றியை அக்கட்சியின் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

பூபேந்திர படேல் பேட்டி: தேர்தல் வெற்றியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பூபேந்திர படேல், "குஜராத்தின் வளர்ச்சி அரசியல் தொடர வேண்டும் என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். தீர்ப்பு மிகவும் தெளிவாக உள்ளது. மக்கள் அளித்துள்ள இந்தத் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறேன். இந்த வெற்றிக்காக பாஜக தொண்டர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் பாடுபட்டிருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டார்.

குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாடீல்: தேர்தல் வெற்றியை அடுத்து முதல்வர் பூபேந்திர படேலுக்கு இனிப்பு வழங்கி பாஜக மாநில தலைவர் சி.ஆர்.பாடீல் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் வரும் 12-ம் தேதி பதவி ஏற்பார். அன்றைய தினம் 2 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறும். இரண்டாவது முறையாக முதல்வராக பதவி ஏற்க உள்ள பூபேந்திர படேலின் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்பார்கள்" என தெரிவித்தார்.

2 மணி நிலவரம்: பாஜக 17 இடங்களில் வெற்றி; 140 இடங்களில் முன்னிலை. காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றி. 14 தொகுதிகளில் முன்னிலை. ஆம் ஆத்மி 5 தொகுதிகளில் முன்னிலை. சமாஜ்வாதி கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை. சுயேட்சைகள் 2 தொகுதிகளில் முன்னிலை.

27 ஆண்டுகளாக நீடிக்கும் பாஜக ஆட்சி: குஜராத்தில் 1995-ல் இருந்து பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. 1995-ல் அக்கட்சியின் கேசுபாய் படேல் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை அடுத்து நரேந்திர மோடி அதிகபட்சமாக 12 ஆண்டுகள் 227 நாட்கள் அம்மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். அவருக்கு அடுத்து ஆனந்தி பென் படேல் 2 ஆண்டுகள் 77 நாட்களும், விஜய் ரூபானி 5 ஆண்டுகள் 37 நாட்களும் முதல்வர்களாக இருந்துள்ளனர். பூபேந்திர படேல் சுமார் 15 மாதங்களாக முதல்வராக இருந்து வருகிறார்.

அதிக தொகுதிகளை கைப்பற்றிய கட்சி எது? - குஜராத்தில் தற்போது நடைபெற்றது 15-வது சட்டப்பேரவைக்கான தேர்தல். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 149 தொகுதிகளில் வெற்றி பெற்றதுதான் சாதனை அளவாக இருந்து வருகிறது. 1985-ல் நடைபெற்ற 7-வது சட்டப்பேரவைத் தேர்தலில்தான் இந்த வெற்றியை காங்கிரஸ் பெற்றது. பாஜகவைப் பொறுத்தவரை 2002-ல் நடைபெற்ற 11-வது சட்டப்பேரவைத் தேர்தலில் 127 இடங்களில் வெற்றி பெற்றது. இதுவே, இதற்கு முன்பு வரை பாஜக பெற்ற அதிகபட்ச வெற்றியாக உள்ளது. கடந்த 2017-ல் நடைபெற்ற 14-வது சட்டப்பேரவைக்கான தேர்தலில் பாஜக 99 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x