Published : 08 Dec 2022 01:52 PM
Last Updated : 08 Dec 2022 01:52 PM

5 மாநில இடைத்தேர்தல்கள் அனைத்திலும் பின்தங்கிய பாஜக

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் 6 சட்டப்பேரவைகளுக்கும், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இவை அனைத்திலும் பாஜக பின்தங்கியுள்ளது.

இடைத்தேர்தல்: பிகாரின் குர்ஹானி, சத்தீஸ்கரின் பனுப்ரதாப்பூர், ஒடிசாவின் பாதம்பூர், ராஜஸ்தானின் சர்தார் சாகர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. உத்தரப் பிரதேசத்தில் ராம்பூர் சதார், கத்துவாலி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், மெயின்புரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இவற்றில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னிலை வகிக்கும் கட்சிகள்: நண்பகல் 1.30 மணி நிலவரப்படி பிகாரில் குர்ஹானி தொகுதியில் ஆளும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் மனோஜ் கு சிங் 61 ஆயிரத்து 564 வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாம் இடம் பிடித்துள்ள பாஜக வேட்பாளர் கேதர் பிரசாத் குப்தா 59 ஆயிரத்து 87 வாக்குகள் பெற்றுள்ளார்.

சத்தீஸ்கரில் பானுபிரதாப்பூர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் வேட்பாளர் சாவித்ரி மனோஜ் மாண்டவி 37 ஆயிரத்து 854 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் பிரம்மானந்த் நேதம் 21 ஆயிரத்து 487 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

ஒடிசாவின் பாதம்பூருக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தள வேட்பாளர் பர்ஷா சிங் பரிஹா 69 ஆயிரத்து 250 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் பிரதீப் புரோஹித் 45 ஆயிரத்து 192 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ராஜஸ்தானின் சர்தார் சாஹர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அணில் குமார் ஷர்மா 87 ஆயிரத்து 246 வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அஷோக் குமார் 61 ஆயிரத்து 694 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் கத்தோலி தொகுதி இடைத்தேர்தலில் ராஷ்ட்ரிய லோக் தள் வேட்பாளர் மதன் பையா 44,368 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளர் ராஜ்குமாரி 32 ஆயிரத்து 249 வாக்குகள் பெற்று பின்தங்கி உள்ளார். இதேபோல், ராம்பூர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் முகம்மது ஆசிம் ராஜா 25 ஆயிரத்து 604 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளர் ஆகாஷ் சக்சேனா 19 ஆயிரத்து 229 வாக்குகள் பெற்று பின் தங்கி உள்ளார்.

டிம்பிள் யாதவ் முன்னிலை: மெயின்புரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், நண்பகல் 1.30 மணி நிலவரப்படி டிம்பிள் யாதவ் 3 லட்சத்து 77 ஆயிரத்து 312 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்ட பாஜக வேட்பாளர் ரகுராஜ் சிங் சாக்யா, ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 477 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளரை விட டிம்பிள் யாதவ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதால் அவர் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது. | குஜராத் நிலவரம் > குஜராத் தேர்தல் முடிவுகள் | இமாச்சல் நிலவரம் > இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x