Published : 08 Dec 2022 12:59 PM
Last Updated : 08 Dec 2022 12:59 PM

இமாச்சல் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிப்பது காங்கிரஸுக்கு ஏன் அவ்வளவு அவசியம்?

ஷிம்லா: தேசிய கட்சியாகவே இருந்தாலும் கூட ஒரு கட்சி தேர்தலில் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்தால் அதுவும் தொடர்ந்து இழந்துகொண்டே இருந்தால் அது அக்கட்சியின் முடிவுரையை எழுதிவிடும் என்பதில் எவ்வித ஐயமும் இருக்க இயலாது. இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், பெரும்பாலான சட்டப்பேரவைத் தேர்தல்கள் என அடுத்தடுத்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் காங்கிரஸுக்கு சிறிய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் வெற்றியை உறுதி செய்வது மிக மிக அவசியமானதாக இருக்கிறது. | இமாச்சல் நிலவரம் > இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள் |

1971-ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேச மாநிலம் உருவானதிலிருந்தே அங்கே இரண்டு கட்சிகளின் ஆதிக்கம் இருந்துள்ளன. காங்கிரஸ் அல்லது பாஜகவே ஆட்சியில் இருந்துள்ளன. அண்மையில் ஆம் ஆத்மி அங்கே எட்டிப் பார்த்தாலும் கூட மும்முனை சவால் எல்லாம் ஏற்படுத்த முடியாது என்று தன்னிலை உணர்ந்து பின்வாங்கியது. தனது கவனத்தையெல்லாம் குஜராத்தில் குவித்தது. இமாச்சலப் பிரதேத்தைவிட குஜராத் ஆம் ஆத்மிக்கு இமாலய சவால்தான் என்றாலும், இமாச்சல் மக்களின் மனநிலை காங்கிரஸ், பாஜகவை தாண்டி யோசிக்கத் தயாராகவே இல்லை என்பதை ஆம் ஆத்மி புரிந்து ஒதுங்கிக் கொண்டதாக அக்கட்சியினரே கூறுகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தலை வென்றெடுப்பது மிக மிக முக்கியமானதாக இருக்கிறது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப்பையும், உத்தராகண்டையும் காங்கிரஸ் இழந்துவிட்டது. அதன் பின்னர் நடந்த இடைத்தேர்தல்களில் 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும், 1 நாடாளுமன்றத் தொகுதியிலும் காங்கிரஸ் வென்றிருக்கலாம். ஆனால், 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் அவையெல்லாம் ஆறுதல் பரிசாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர, ஓர் உத்வேகப் புள்ளியாக இருக்க முடியாது.

இமாச்சலப் பிரதேச தேர்தலில் இன்று காங்கிரஸ் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. காங்கிரஸில் விதர்பா சிங் இதே மாநிலத்தில் 21 ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறார். காங்கிரஸுக்கு இங்கே நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. இருந்தும் இடையில் பாஜகவிடம் ஆட்சியைக் கோட்டைவிட்டது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. காலை 8 மணி தொடங்கி காங்கிரஸும், பாஜகவும் கடும் போட்டாப்போட்டியில் இருந்த நிலையில், பிற்பகல் 12.50 மணிக்குப் பின்னர் காங்கிரஸ் 39, பாஜக 26, பிற கட்சிகள் 3 என்ற நிலை மாறியிருக்கிறது. இங்கு ஆட்சி அமைக்க 35 இடங்கள் தேவை.

கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் சுற்றுலா சார்ந்த பொருளாதாரம் கொண்ட இமாச்சலில் வேலையிழப்பு, வருவாய் இழப்பு எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. இதுதான் காங்கிரஸ் கையிலெடுத்த பிரச்சார காரணிகளாகவும் இருந்தது. அதனாலேயே ஆரம்பத்திலிருந்தே வெற்றி நம்பிக்கையை காங்கிரஸ் வெளிப்படுத்தி வந்தது. ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்து வாக்குகள் சேகரித்தது காங்கிரஸ். மறுபுறம் பாஜக வழக்கம்போல் மோடி என்ற ஒற்றை முகத்தை முன்னிறுத்தியும், இரட்டை இன்ஜின் அரசு அமைப்போம் என்றும் வாக்கு சேகரித்தது.

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை முடிக்கும்போது இமாச்சல் தேர்தல் வெற்றியைப் பற்றி பேச முடிந்தால், அது காங்கிரஸுக்கு மிகப்பெரிய வெற்றிதான் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x