Published : 08 Dec 2022 11:16 AM
Last Updated : 08 Dec 2022 11:16 AM

பிரதமர் மோடி மீது குஜராத் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள்: ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மீது குஜராத் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்று பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகி இருப்பதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். பட்டாசு வெடித்தும், ஆடிப்பாடியும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், இந்த தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங், "குஜராத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவான அலை வீசியுள்ளது. அதன் காரணமாகவே நாங்கள் தற்போது புதிய சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி மீது குஜராத் மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்" என தெரிவித்தார்.

11 மணி நிலவரம்: பாஜக 152 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 7 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. சமாஜ்வாதி கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது. சுயேட்சைகள் 4 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

பிரபல வேட்பாளர்கள்: குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், தான் போட்டியிட்ட கட்லோடியா தொகுதியில் 23 ஆயிரத்து 713 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, தான் போட்டியிட்ட ஜாம்நகர் வடக்கு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் பிபேந்திர சிங் ஜடேஜா தொடக்கத்தில் முன்னிலை வகித்து வந்த நிலையில், காலை 11 மணி நிலவரப்படி ரிவாபா ஜடேஜா முன்னிலை வகித்து வருகிறார். கோத்ரா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.கே. ராகுல் 8 ஆயிரத்து 772 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

27 ஆண்டுகளாக நீடிக்கும் பாஜக ஆட்சி: குஜராத்தில் 1995ல் இருந்து பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. 1995ல் அக்கட்சியின் கேசுபாய் படேல் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை அடுத்து நரேந்திர மோடி அதிகபட்சமாக 12 ஆண்டுகள் 227 நாட்கள் அம்மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். அவருக்கு அடுத்து ஆனந்தி பென் படேல் 2 ஆண்டுகள் 77 நாட்களும், விஜய் ரூபானி 5 ஆண்டுகள் 37 நாட்களும் முதல்வர்களாக இருந்துள்ளனர். பூபேந்திர படேல் சுமார் 15 மாதங்களாக முதல்வராக இருந்து வருகிறார்.

அதிக தொகுதிகளை கைப்பற்றிய கட்சி எது? - குஜராத்தில் தற்போது நடைபெற்றது 15வது சட்டப்பேரவைக்கான தேர்தல். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 149 தொகுதிகளில் வெற்றி பெற்றதுதான் சாதனை அளவாக இருந்து வருகிறது. 1985ல் நடைபெற்ற 7வது சட்டப்பேரவைத் தேர்தலில்தான் இந்த வெற்றியை காங்கிரஸ் பெற்றது. பாஜகவைப் பொறுத்தவரை 2002ல் நடைபெற்ற 11வது சட்டப்பேரவைத் தேர்தலில் 127 இடங்களில் வெற்றி பெற்றதே இதுவரை அதிகபட்ச வெற்றியாக உள்ளது. கடந்த 2017ல் நடைபெற்ற 14வது சட்டப்பேரவைக்கான தேர்தலில் பாஜக 99 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. | குஜராத் நிலவரம் > குஜராத் தேர்தல் முடிவுகள் |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x