மின்னணு பரிவர்த்தனையில் பெட்ரோல், டீசல் நிரப்பினால் 0.75% தள்ளுபடி: அருண் ஜேட்லி அறிவிப்பு

மின்னணு பரிவர்த்தனையில் பெட்ரோல், டீசல் நிரப்பினால் 0.75% தள்ளுபடி: அருண் ஜேட்லி அறிவிப்பு
Updated on
2 min read

மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக, டெபிட், கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல், ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

கறுப்புப் பணம், கள்ள நோட்டுகள், தீவிரவாத நிதியுதவியை கட்டுப்படுத்தும் வகையில், பழைய 500, 1000 ரூபாய் நோட் டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ம் தேதி அறிவித்தார்.

இதனால் ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு காரணமாக தங்கள் கணக்கில் பணம் இருந்தும் அதை எடுக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், ரொக்க பணப் பரிமாற்றத் தைக் குறைத்துக் கொண்டு மின்னணு முறைக்கு மாற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, டெபிட், கிரடிட் கார்டுகள், இணையதளம் மூலம் பணப்பரிவர்த்தனையை மேற்கொள் ளுமாறு அறிவுறுத்தி வருகிறது. இதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

இதுதொடர்பாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

ரொக்க பணப் பரிமாற்றத்தைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனவே, ரொக்கத்துக்கு பதிலாக மின்னணு பணப் பரிமாற்றத்தைப் பயன்படுத்த வேண்டும். இதற்காக பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.

நாடு முழுவதும் தினமும் சுமார் 4.5 கோடி பேர் பெட்ரோல், டீசல் வாங்கு கின்றனர். இவர்களில் கிரடிட், டெபிட் கார்டுகள் மற்றும் இ-வாலட் முறையைப் பயன்படுத்தி வாங்குவோருக்கு 0.75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட கிராமங்களுக்கு தலா 2 பிஓஎஸ் இயந்திரங்கள் (கார்டு ஸ்வைப்) இலவசமாக வழங்கப்படும். இதற்காக 1 லட்சம் கிராமங்கள் தேர்வு செய்யப்படும். இதன்மூலம் 75 கோடி பேர் பயன்பெறுவர்.

புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்காக மின்னணு முறையில் மாதாந்திர சீசன் டிக்கெட் பெறுவோருக்கு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் 0.5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

இணையதளம் வழியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடு வழங்கப்படும். இத்துடன் ரயில் நிலையங்களில் உள்ள தங்குமிடம், உணவு, ஓய்வறை ஆகியவற்றுக்காக இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தினால் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.

ஒரே முறையில் ரூ.2 ஆயிரம் வரை டெபிட், கிரடிட் மற்றும் இதர கார்டுகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்தால் சேவை வரி விதிக்கப்பட மாட்டாது.

அரசு காப்பீட்டு நிறுவனங்களின் இணையதளம் மூலம் பொது காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு வாங்குவோருக்கும் பிரீமியம் செலுத்துவோருக்கும் முறையே 10, 8 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.

அரசுக்கு செலுத்த வேண்டிய பல்வேறு கட்டணங்களை மின்னணு முறையில் செலுத்துவோருக்கு பரிமாற்ற கட்டணமும் எம்டிஆர் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் மின்னணு முறையில் பணம் செலுத்தினாலோ ஸ்மார்ட் டிஏஜி மற்றும் ஆர்எப்ஐடி ஆகிய மின்னணு வசதியைப் பயன்படுத்தினாலோ 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.

டிச. 10-க்கு பிறகு பழைய ரூ.500 செல்லாது

பேருந்து, ரயில், மெட்ரோ ரயில், விமான கட்டணம் ஆகியவற்றுக்கு டிசம்பர் 15-ம் தேதி வரை பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில், விமான கட்டணம் ஆகியவற்றுக்கு டிசம்பர் 10-ம் தேதிக்குப் பிறகு பழைய 500 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படாது என்று மத்திய நிதியமைச்சகம் நேற்று திடீரென அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in