Published : 08 Dec 2022 09:58 AM
Last Updated : 08 Dec 2022 09:58 AM

குஜராத்தில் பாஜக 135 முதல் 145 இடங்களில் வெற்றி பெறும்: ஹர்திக் படேல்

ஹர்திக் படேல்

அகமதாபாத்: குஜராத்தில் பாஜக 135 முதல் 145 இடங்களில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணம் பணி இன்று காலை 8 மணி முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காலை 9.30 மணி நிலவரப்படி குஜராத்தில் பாஜக 135 தொகுதிகளிலும், காங்கிரஸ் 28 தொதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி 13 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. | குஜராத் நிலவரம் > குஜராத் தேர்தல் முடிவுகள் |

குஜராத்தில் பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான ஹர்திக் படேல், குஜராத்தில் பாஜக 135 முதல் 145 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: "மக்களின் மத நம்பிக்கைக்கு எதிராக செயல்படுபவர்கள் குஜராத்தில் வெற்றி பெற முடியாது. பாஜக 135 முதல் 145 இடங்களில் வெற்றி பெறும். நிச்சயமாக நாங்கள்தான் மீண்டும் ஆட்சி அமைப்போம்.

குஜராத்தில் சிறப்பான ஆட்சியைக் கொடுத்து வருவதால்தான் பாஜக வெற்றி பெறுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக குஜராத்தில் எவ்வித மதக் கலவரமும் இல்லை. மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள். பாஜக ஆட்சியில்தான் பாதுகாப்பு இருக்கும் என மக்கள் நம்புகிறார்கள். மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றக் கூடிய கட்சியாக பாஜக இருக்கிறது. பாஜக வந்தால்தான் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும் என்ற எண்ணத்தோடுதான் மக்கள் தாமரைச் சின்னத்திற்கு வாக்களித்துள்ளார்கள்.

குஜராத்தின் பெருமிதத்திற்கு எதிராக செயல்படும் கட்சி காங்கிரஸ். குஜராத் மக்களின் உணர்வுகளோடு அக்கட்சி விளையாடியது. அதன் காரணமாகவே அக்கட்சியிடம் இருந்து மக்கள் விலகிவிட்டார்கள். கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களில்கூட பலவற்றை அக்கட்சி இம்முறை இழக்கும். தொலைநோக்குப் பார்வை இல்லாதவர்களால் அரசியலில் வெற்றி பெற முடியாது; நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்ல முடியாது. ராகுல் காந்தி இதற்கு ஓர் உதாரணம்" என்று அவர் தெரிவித்தார்.

குஜராத்தில் பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவது குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில அமைச்சர் பூர்னேஷ் மோடி, "முந்தைய வெற்றிகளைக் காட்டிலும் இம்முறை பாஜக மகத்தான வெற்றி பெறும். அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x