எய்ட்ஸ் பாதித்த குழந்தையைத் தத்தெடுத்த அமெரிக்க பெண்

எய்ட்ஸ் பாதித்த குழந்தையைத் தத்தெடுத்த அமெரிக்க பெண்
Updated on
1 min read

நேசிக்கும் இதயத்துக்குக் காரணங்கள் தேவையில்லை என்றார் பாஸ்கல். அவர் அமெரிக்கப் பெண்ணான கரோலின் சீபர்கரைப் பற்றித்தான் சொல்லியிருக்கக் கூடும்.

அமெரிக்காவின் டென்வர் பகுதியைச் சேர்ந்த கட்டிடக்கலை பொறியாளர் கரோலின் சீபர்கர். அவர் தெலங்கானாவைச் சேர்ந்த எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தையைத் தத்தெடுத்துள்ளார்.

கைவிடப்பட்ட குழந்தை

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட காரணத்துக்காக பிறந்த 7 நாட்களில் ரோல்மம்தா சுங்கச்சாவடி அருகே ஆதரவற்றுக் கிடந்தது அந்தப் பெண் குழந்தை. தற்போது 14 மாதங்கள் ஆகும் அக்குழந்தையை மாநில அரசால் நடத்தப்படும் சிஷு விஹார் ஆதரவற்றோர் இல்லத்தினர் பராமரித்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 4-ம் தேதி தெலங்கானா மாநிலத்தின் அடிலாபாத்துக்கு கரோலின் மற்றும் அவரின் தாய் அனேட் வந்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசும் கரோலின், ''என் சகோதரி வீடு எப்போதும் சிறப்புக் குழந்தைகளை வரவேற்கும் இல்லம். என்னுடைய இதயத்தில் அத்தகைய குழந்தைகள் தங்க ஏராளமான அறைகள் இருக்கின்றன.

அமெரிக்க குழந்தை தத்தெடுப்பு மையம் மூலம் இப்பெண் குழந்தை பற்றிய தகவல் ஏப்ரல் மாதத்தில் கிடைத்தது. அதன்பின்னர் தேசிய மத்திய தத்தெடுப்பு ஆணையத்துக்குத் தெரிவித்தேன். எனக்கு இந்தியா மிகவும் பிடிக்கும் என்பதால், உடனே குழந்தையைத் தத்தெடுக்கும் பணிகளில் இறங்கிவிட்டேன்.

நான் இந்தியா வந்ததில் இருந்து குழந்தை என்னுடனேயே வசித்துவருகிறது. இது எனக்கும் குழந்தைக்குமான பிணைப்பை இன்னும் அதிகமாக்கும். இதன்மூலம் குழந்தை மீது என்னால் முழு அன்பையும், அக்கறையையும் காட்ட முடியும்.

அமெரிக்கத் தட்பவெப்பம் இந்தியக் குழந்தைக்கு ஒத்துவருமா என்று யோசித்தேன். டென்வர் நகரின் சூரியக் கதிர்கள் வெப்பத்தைத் தந்து குழந்தையைக் காக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். உணவுமுறையைப் பொருத்த வரையில் குழந்தைக்காக வீட்டிலேயே சைவம் சமைப்பது குறித்துக் கற்றுக்கொண்டேன். சைவ உணவுகள் மூலம் குழந்தையின் உணவுத்தேவைகளைப் பூர்த்தி செய்வேன்.

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தை என்பது எனக்கு எவ்விதக் குழப்பத்தையும் அளிக்காது. என்னுடைய நிறைய நண்பர்கள் எத்தியோப்பியா மற்றும் சீனாவில் இருந்து குழந்தைகளைத் தத்தெடுத்திருக்கின்றனர். குழந்தை வளர்ப்பு குறித்து ஏராளமான விஷயங்களைக் கலந்து ஆலோசித்த பிறகே இந்த முடிவை எடுத்திருக்கிறேன்'' என்கிறார் இந்திய அமெரிக்கத் தாய் கரோலின்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in