Published : 07 Dec 2022 09:33 AM
Last Updated : 07 Dec 2022 09:33 AM

டெல்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி மகத்தான வெற்றி; பாஜகவுக்கு பெரும் பின்னடைவு

வெற்றியைக் கொண்டாடும் தொண்டர்கள்

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக செலுத்திவந்த ஆதிக்கத்தை ஆம் ஆத்மி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. பாஜகவுக்கு இது பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 131 வார்டுகளிலும், பாஜக 99 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எளிதாக வாய்த்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

கட்சிகள் வெற்றி பெற்ற வார்டு
ஆம் ஆத்மி 131
பாஜக 99
காங்கிரஸ் 7
சுயேச்சை 2

மொத்தம் 250 வார்டு உறுப்பினர்கள் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 709 பெண்கள் உட்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் இதில் போட்டியிட்டனர். ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் 250 வார்டுகளிலும் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. ஆனால் காங்கிரஸ் 247 வார்டுகளில் மட்டுமே தனது வேட்பாளர்களை நிறுத்தியது

இந்நிலையில் இன்று காலை 8 மணி தொடங்கி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 43 மையங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆரம்பகட்ட போக்கின்படி பாஜக, ஆம் ஆத்மி இடையே மிகக் கடுமையான போட்டி நிலவியது. நெக் டூ நெக் என்றளவில் போட்டி என்ற சூழலே இருந்தது. 126 வார்டுகளைக் கைப்பற்றும் கட்சி டெல்லி மாநகராட்சியைக் கைப்பற்றும். இந்தச் சூழலில் 126 வார்டுகளையும் தாண்டி 131 தொகுதிகளில் வெற்றி பெற்று டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது.

சற்று முன்னர் மாநில தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக 239 வார்டுகளின் முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி ஆம் ஆத்மி 131 வார்டுகளிலும், பாஜக 99 வார்டுகளிலும் காங்கிரஸ் 7 வார்டுகளிலும், சுயேச்சை 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

பாஜகவுக்கு ஷாக் கொடுத்த ஆம் ஆத்மி: முன்னதாக, ஆம் ஆத்மி கட்சி டெல்லி மாநகராட்சியை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருந்தன. இந்த மாநகராட்சித் தேர்தல், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் இந்தத் தேரதல் முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அரசியல் கட்சியாக உருவெடுத்து அண்மையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆம் ஆத்மிக்கு இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது அவசியமானதாக இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறியிருந்தனர். அதேபோல், பாஜகவுக்கும் டெல்லி மாநகராட்சியைக் கைப்பற்றுவது கவுரவ பிரச்சினையாக உள்ளது என்று தெரிவித்திருந்தனர்.

இந்தச் சூழலில் இப்போது ஆம் ஆத்மி எளிதான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.இதனால், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கட்சி உயர்மட்ட ஆலோசனைக் குழுவை கூட்டியுள்ளார். நாளை (டிசம்பர் 8ஆம் தேதி) வெளியாகும் குஜராத் மற்றும் இமாச்சல சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன . இதிலும் ஆம் ஆத்மி குஜராத்தில் பெரிய அளவிலான வாக்கு விகிதத்தை எதிர்பார்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x