உ.பி | லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னையே அடகுவைத்து தோல்வி அடைந்த பெண்

உ.பி | லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னையே அடகுவைத்து தோல்வி அடைந்த பெண்
Updated on
1 min read

லக்னோ: ஆன்-லைன் லுடோ விளையாட்டில் தன்னையே அடகு வைத்து விளையாடிய பெண் ஒருவர் தோல்வி கண்டார். இதையடுத்து அவரை மீட்டுத் தரக்கோரி பெண்ணின் கணவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

நமது நாட்டில் லுடோ என்ற சூதாட்டம் மிகவும் பிரபலமானதாக உள்ளது. இந்த லூடோ வகை விளையாட்டில், பகடைகளை உருட்டி, காய்களை நகர்த்தி விளையாடுவதும், அந்தந்த நிறத்தின் வீட்டை அடையும் வகையில் விளையாடுவதும் விதிகள் ஆகும். ஒருவரின் வழியைத் தடுப்பதும், மற்றவர்களின் ஆட்டத்தின் வேகத்தைக் குறைக்க மற்றவர்களின் துண்டுகளை வெட்டுவதும் லுடோவின் எதிர் விளையாட்டாக அமைந்துள்ளது. ஆன்-லைனில் பணத்தைக் கட்டி விளையாடும் அளவுக்கு லுடோ வளர்ந்துவிட்டது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ரேணு என்ற பெண், ஆன்-லைன் லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னைத்தானே அடகுவைத்து விளையாடியுள்ளார். ஆஸம்கர் மாவட்டத்திலுள்ள நாகர் கோட்வாலி அருகே அமைந்துள்ளது தேவ்கலி. இந்த தேவ்கலி கிராமத்தைச் சேர்ந்தவர்தான் ரேணு. இவர் தனது கணவர், 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இவரது கணவர் உமேஷ், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வேலை செய்து வருகிறார். தனது கணவர் மாதம்தோறும் அனுப்பும் பணத்தை வைத்து தனது வீட்டின் உரிமையாளருடன் 'லுடோ' ஆன்-லைன் விளையாட்டை விளையாடி வந்துள்ளார்.

கணவர் அனுப்பிய பணம் முழுவதையும் ஆன்-லைன் லுடோ சூதாட்டத்தில் இழந்த ரேணு, ஒரு கட்டத்தில் தன்னையே பணயமாக வைத்து விளையாடியுள்ளார். இதில் தோல்வி கண்டதால் அந்த வீட்டின் உரிமையாளருடன் ரேணு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

இந்த விவரங்களை அறிந்த ரேணுவின் கணவர் உமேஷ். போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது மனைவி லுடோ விளையாட்டில் தோற்றதால், வெற்றி பெற்றவருடன் சென்றுவிட்டார். தயவு செய்து எனது 2 குழந்தைகளுக்காக எனது மனைவியை மீட்டு தாருங்கள். இல்லாவிட்டால் எங்களது வாழ்க்கையே சூன்யமாகி விடும். இவ்வாறு புகாரில் உமேஷ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உமேஷ் கொடுத்த புகாரின் பிரதி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு உ.பி. மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in