Published : 07 Dec 2022 08:04 AM
Last Updated : 07 Dec 2022 08:04 AM
புதுடெல்லி: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்க வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல் வலியுறுத்தியுள்ளார்.
கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் துர்க்மெனிஸ்தான் சார்பில் இந்தியாவுக்கான அந்த நாட்டுதூதர் பங்கேற்றார். இதர நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் என்எஸ்ஏ அஜித் தோவல் பேசியதாவது: மத்திய ஆசிய நாடுகள் இந்தியாவுக்கு அருகில் அமைந்துள்ளன. எனவே இந்த நாடுகளின் நலனில் இந்தியா அதிக அக்கறை கொண்டிருக்கிறது. குறிப்பாக மத்திய ஆசிய நாடுகளுடன் பாதுகாப்பு, தொழில் உறவுகளை இந்தியா மேம்படுத்தி வருகிறது. போக்குவரத்து வழித்தடங்கள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
சில நாடுகள் (சீனா) பொருளாதார போக்குவரத்து வழித்தடம் என்ற பெயரில் வெளிநாடுகளில் சாலைகளை அமைத்து வருகின்றன. இது பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு வழிவகுக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை நட்பு நாடுகளின் இறையாண்மையை மதிக்கிறோம். இதன் காரணமாக வெளிப்படையான, பாதுகாப்பான போக்குவரத்து வழித்தடங்களை ஏற்படுத்த விரும்புகிறோம்.
தீவிரவாதத்தை வேரறுக்க மத்திய ஆசிய நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். சர்வதேச தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு ஆதரவும் நிதியுதவியும் வழங்கும் நாடுகளை (பாகிஸ்தான்) தனிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT