

இ-வாலட் வர்த்தகத்தில் சிலபல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு உதவி செய்ய முயற்சி செய்ததாக மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் குற்றம்சாட்டியுள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் கூறும்போது, “ரொக்கமற்ற பொருளாதாரம் என்று கூறிக்கொண்டு இ-வாலட்டை விளம்பரப்படுத்தி வருகின்றனர். ஏன் அரசே இ-வாலட் திட்டம் ஒன்றை கையகப்படுத்தலாமே. இது பாதுகாப்பாக இருக்கும். இ.வாலட் நிறுவனங்களில் 60% பங்குகளை வைத்திருப்பவர்கள் சீனர்கள். நாம் நம் ரகசியங்களை சீனர்களுக்கு அளிக்கும் திட்டமாகும் இது.
தற்போது கறுப்புப் பணத்திலிருந்து ரொக்கமற்ற பொருளாதாரம் என்று பேசத்தொடங்கியுள்ளனர். இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டை எப்படி நீங்கள் ரொக்கமற்ற நாடாக மாற்ற முடியும்?
பாஜக அரசு சிலபல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இ-வாலட் வர்த்தகத்தில் உதவி புரிகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை நல்ல முயற்சிதான், ஆனால் இதனை அமல் படுத்திய முறை 80 உயிர்களை பலிவாங்கியுள்ளது.
நோட்டு நடவடிக்கைக்கு முன்னால் பாஜக பெரிய அளவில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளது. பாஜக தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்” என்றார். ஆனால் திரிணமூல் காங்கிரஸ் கோரிக்கையான நோட்டு நடவடிக்கையை முற்றிலும் வாபஸ் பெறுதல் என்பதை சச்சின் பைலட் ஏற்கவில்லை, காரணம், “இது இன்னும் பெரிய நிதிநெருக்கடியில் கொண்டு போய் விடும்” என்கிறார்.