

தமிழக அரசின் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரரும் தொழிலதி பருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாச ரெட்டி, நண்பர் பிரேம் ஆகியோரது வீடுகளில் கடந்த 7-ம் தேதி முதல் 4 நாட்கள் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் சேகர் ரெட்டிக்கு ரூ.25 கோடி ரூபாய் வரை புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்தது கொல்கத்தாவைச் சேர்ந்த பராஸ்மால் லோதா தான் என்பது தெரியவந்தது.
மேலும் டெல்லியில் வழக் கறிஞர் ரோஹித் தாண்டன் அலு வலகத்தில் நடத்தப்பட்ட சோதனை யில் ரூ.13.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் புதிய ரூபாய் நோட்டுகள் மட்டும் ரூ.2.60 கோடிக்கு இருந்தது. இந்தப் பணத்தை மாற்றுவதற்கும் லோதா உதவியது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தலைமறைவான லோதாவைப் பிடிக்க அமலாக்கத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்தனர். அப்போது அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு திட்டமிட்ட தகவல் தெரியவந்தது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் லோதாவை பிடிக்க வலைவிரிக்கப்பட்டது.
அமலாக்கத் துறையினர் எதிர்பார்த்தது போலவே கடந்த செவ்வாய்க்கிழமை அன்று லோதா மும்பை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றார். அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டும் என்பதற்காக பாதுகாப்பு சோதனைகளை லோதா கடக்கும் வரை காத்திருந்தினர். பின்னர் போர்டிங் வாசல் கடந்து விமானம் ஏறுவதற்காக லோதா சென்றபோது அவரை அப்படியே சுற்றிவளைத்து அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
இந்த நடவடிக்கையின்போது குடியேற்ற கவுன்டர் அருகே ரூ.2.7 லட்சம் மதிப்புள்ள புதிய நோட்டுகளை லோதா விட்டுச் சென் றதையும் அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை டெல்லியில் இருந்து வந்த அமலாக்கத் துறை யிடம் லோதா ஒப்படைக்கப்பட்டு, சட்டவிரோத பணபரிமாற்ற சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டை விசாரித்த நீதிமன்றம் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.
லோதா தற்போது 7 நிறுவனங்களுக்கு இயக்குநராக உள்ளார். அவரது நிறுவனங்கள் அனைத்தும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.