Published : 06 Dec 2022 07:57 PM
Last Updated : 06 Dec 2022 07:57 PM

ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சார அடையாளங்களில் ஒன்று: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

கோப்புப்படம்

புதுடெல்லி: “ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சார அடையாளங்களில் ஒன்று. தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு தொடர்பான விவகாரத்தில் எவ்வாறு தலையிட முடியும்?” என ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதங்களை முன்வைத்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா அமைப்பு மற்றும் விலங்கின ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஐந்தாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, "இந்தியா ஒரு பன்முக கலாச்சாரம் கொண்ட நாடு. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு கலாச்சாரம் உண்டு.சிலர் அசைவ உணவு உண்பர், சிலர் சைவம், சிலர் வீகன் என பல்வேறு உணவு பழக்கத்தை கொண்டுள்ளனர். உணவுக்காக விலங்குகளை கொல்வது அனுமதிக்கப்படுகிறது. அதேவேளையில் சில கட்டுப்பாடுகள் உள்ளதே தவிர உண்ணக் கூடாது என்று சட்டம் கூறவில்லை. ஜல்லிக்கட்டு விதிமுறைகள் அனைத்தும் மிகத் தெளிவாக உள்ளன. அதில் எந்த சமரசமும் செய்யப்படுவது இல்லை" என்று பதிலளித்தார்.

அப்போது நீதிபதிகள், "உணவு என்பது மிக மிக அத்தியாவசியமான விஷயம். அதை இதோடு எப்படி ஒப்பிடுவது?” என கேள்வி எழுப்பினர். அப்போது, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், "உணவுப் பழக்கம் என்பது கலாச்சாரத்தோடு இணைந்தது. எனவே ஒருவர் பின்பற்றிவரும் கலாச்சாரத்தால் அவருக்கு ஒரு உணவு பழக்கம் ஏற்படுகிறது. கலாச்சாரம், பண்பாடு என்பது அடிப்படை உரிமையாகும். எனவே எங்களுக்கு ஜல்லிக்கட்டு என்பது அவசியமானது. ஏனெனில் ஜல்லிக்கட்டு தமிழகத்தின் கலாச்சாரத்தோடும், பண்பாட்டோடும் ஒன்றிணைந்தது" என்று கூறினார். மேலும், ஜல்லிக்கட்டு கலாச்சாரம் சார்ந்தது என்பதற்கான ஆவணங்கள் தமிழ்நாடு சார்பில் சமர்பிக்கப்பட்டது.

இதற்கு விலங்குகள் நல அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து, "எங்களிடம் ஆவணங்கள் எதையும் கொடுக்கவில்லை. எனவே நீதிமன்றம் இதனை பரிசீலிக்கக் கூடாது" என்று தெரிவித்தனர். அப்போது தமிழக அரசு சார்பில், "கலாச்சாரத்தை காப்பது அந்தந்த அரசுகளின் கடமை. இதை அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 29 தெளிவாக கூறியுள்ளது. அந்த அடிப்படையில் ஜல்லிக்கட்டு என்ற தமிழர்களின் கலாச்சாரத்தை காப்பது தமிழ்நாடு அரசின் கடமை மட்டுமல்ல பொறுப்பும்கூட. ஜல்லிக்கட்டு என்பது சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. ஜல்லிக்கட்டு என்பது பொங்கல் தினத்தன்று நடைபெறக்கூடியது. இது சிறந்த விளைச்சலை கொடுத்ததற்காக இயற்கைக்கு நன்றி கூறும் திருவிழாவுடன் தொடர்புடையது. தமிழகத்தின் சமயம் மற்றும் இறை நம்பிக்கை சார்ந்த நிகழ்வாகும்.

ஜல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளம். அதனால்தான் ஒவ்வொரு முறையும் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள நேரடியாக ஜல்லிக்கட்டைக் காண தமிழகத்துக்கு வருகின்றனர். ஜல்லிக்கட்டு தொடர்பான ஏராளமான சுடுமண் சிற்பங்கள் உள்ளிட்டவை தொல்பொருள் ஆய்வுகளில் கிடைத்திருக்கின்றன. அதேபோல் பண்டைய கால குகை ஓவியங்களும் உள்ளன.தமிழ் இலக்கியங்களான தொல்காப்பியம், கலித்தொகை உள்ளிட்டவற்றில் ஏறுதழுவுதல் என்ற பெயரில் ஜல்லிக்கட்டின் முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு பல்கலைக்கழக ஆய்வுகளும் தமிழ்நாடு என்ற மாநிலத்தின் கலாச்சார அடையாளம் ஜல்லிக்கட்டு என்பதை நிரூபித்துள்ளன. புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளரான ரொமீலா தாபர் தனது புத்தகத்தில் ஒரு இனத்தின் கலாச்சார தொடர்புகள் குறித்து தெளிவாக வரையறுத்துள்ளார். அவை அத்தனையும் ஜல்லிக்கட்டுக்கு பொருந்தி செல்கிறது" என தரவுகளை மேற்கோள் காட்டி தமிழக அரசு வாதிட்டது.

அப்போது நீதிபதிகள், ஜல்லிக்கட்டுப் போட்டி எப்போது நடைபெறும்? எங்கெல்லாம் போட்டி நடத்துவார்கள்? ஒரு ஆண்டிற்கு சராசரியாக எத்தனை போட்டிகள் நடத்தப்படுகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு, "ஜனவரி 15-ம் தேதி முதல் மே மாதம் வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். ஒரு கிராமத்திற்கு ஒருமுறை மட்டுமே நடத்த அனுமதிக்கப்படும். தமிழகம் முழுவதும் இந்தப் போட்டிகள் உரிய அனுமதிபெற்று நடத்தப்படும். கடந்த ஆண்டில் 396 ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சுமார் 1.17 லட்சம் காளைகளும் கலந்து கொண்டன. ஆனால் வெறும் ஏழே இடங்களில் சில புகைப்படங்களை எடுத்துவிட்டு, ஜல்லிக்கட்டு முழுமையாக விதிமுறை மீறி நடத்தப்படுகிறது என விலங்குகள் அமைப்புகள் சொல்வது நகைப்புக்குரியது.

அதேவேளையில், 5000 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டில் காளைகள் ஈடுபடுத்தப்படுகின்றன. ஆனால் திடீரென குதிரைகள் போன்று காளைகள் ஓடும் விலங்கு அல்ல எனவே அதனை களத்தில் ஓட விடுவது என்பது துன்புறுத்தல் எனக்கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது?" என தமிழ்நாடு அரசு கேள்வி எழுப்பியதோடு ஜல்லிக்கட்டு தொடர்பான புகைப்பட ஆதாரங்களையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதனைதொடர்ந்து, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "ஜல்லிகட்டுக்கு குடியரசு தலைதலைவர் அனுமதி வழங்கியது சட்டபூர்வமானது. நாங்கள் மாநில அரசுகளின் முடிவுக்கு ஆதரவாக இருக்கிறோம். ஏனெனில் இந்தப் போட்டிக்கு மாவட்ட ஆட்சியர் முழு ஆய்வுக்கு பிறகு தான் அனுமதி வழங்கப்படுகிறது. இதில் சட்ட விதிகள் மீறப்பட்டால் மூன்று ஆண்டு சிறை, 5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு தொடர்பான விவகாரத்தில் எப்படி தலையிட முடியும்? ஜல்லிக்கட்டு என்பது ரேக்ளா உள்ளிட்ட பந்தயம் போல் அல்ல. ரேக்ளா போன்ற பந்தயங்களை மாநில அரசுகள் பல முறை தடை செய்துள்ளன.

ஆனால், ஜல்லிக்கட்டு தமிழரின் கலாச்சாரத்தோடு கலந்த விளையாட்டு என்பதால் அதனை தமிழகம் இதுவரை தடை செய்ததே இல்லை. அதே வேளையில் ஜல்லிக்கட்டு சட்டத்தில் பல்வேறு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளனர். எனவே ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு தனது முழு ஆதரவையும் வழங்கியுள்ளது" என்று கூறினார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு (டிச.7) ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x