

கொல்கத்தா: ஜி20 அமைப்புக்கு கடந்த டிசம்பர் 1-ம் தேதி இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இதற்காக தாமரை சின்னத்துடன் கூடிய இலச்சினையை மத்திய அரசு கடந்த மாதம் வெளியிட்டது. பாஜக சின்னம் தாமரை என்பதால், அதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், ஜி20 தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
அப்போது ஜி-20 தாமரை சின்னம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு மம்தா பானர்ஜி பதில் அளிக்கையில், ‘‘ஜி20 உச்சி மாநாட்டின் இலச்சினையில் தாமரை சின்னம் இருப்பதை நானும் பார்த்தேன். அது நமது நாட்டின் விவகாரம் என்பதால் அதுகுறித்து நாம் எதுவும் சொல்ல முடியாது. தாமரை தேசிய சின்னமாக இருந்தாலும், அது ஒரு கட்சியின் சின்னம் என்பதையும் மறுக்க முடியாது. எனவே, வேறு ஏதாவது ஒரு தேசிய சின்னத்தை இலச்சினையாக தேர்வு செய்திருக்கலாம்’’ என்றார்.