

ஐடிஎஸ் திட்டத்தில் ரூ.14,000 கோடி சொத்துகளை கணக்கு காட்டி தலைமறைவான குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா நேற்று பிடிபட்டார்.
கணக்கில் வராத வருமானம், சொத்துகளை தாமாக முன்வந்து சமர்ப்பிக்கும் திட்டத்தை (ஐடிஎஸ்) மத்திய அரசு கடந்த ஜூன் 1-ம் தேதி அறிமுகம் செய்தது. இத்திட் டம் செப்டம்பர் 30-ம் தேதி நிறைவடைந்தது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த தொழிலதி பர் ரூ.13,860 கோடி சொத்து விவரங்களை தாக்கல் செய்தார்.
ஐடிஎஸ் திட்டத்தில் சமர்ப்பித்த சொத்துகள், வருவாய்க்கு 30 சதவீத வரி, அபராத வரி உட்பட மொத்தம் 45 சதவீத வரி செலுத்த வேண்டும். இந்தத் தொகையை 4 தவணைகளில் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அகமதாபாத் தொழிலதிபர் மகேஷ் ஷா தாக்கல் செய்த சொத்துகளுக்கு முதல் தவணையாக ரூ.1,500 கோடியை செலுத்த வேண்டும். இதற்கான காலக்கெடு கடந்த 30-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் அவர் வரியை செலுத்தாமல் திடீரென தலைமறைவாகிவிட்டார்.
இதைத் தொடர்ந்து மகேஷ் ஷாவின் அகமதாபாத் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தினர்.
இந்நிலையில் மகேஷ் ஷா தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:
நான் கணக்கு காட்டிய சொத்துகள், பணம் எனக்கு சொந்தமான தல்ல. சில அரசியல் வாதிகள், தொழிலதிபர்களுக்கு சொந்த மானது. இந்த பணம், சொத்துகள் யாருக்கு சொந்தமானது என்பதை வருமான வரி அதிகாரிகளிடம் தெரிவிப்பேன். இதற்கு கால அவகாசம் தேவை. எல்லா தகவலையும் வருமான வரித் துறையினரிடம் தெரிவித்த பிறகே ஊடகங்களுக்கு தெரிவிப்பேன். நான் தவறு இழைத்துவிட்டேன். கமிஷனுக்கு ஆசைப்பட்டு கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க உதவினேன். எனது குடும்பத்தாருக்கு இதில் தொடர்பு இல்லை. அவர்களை இந்த வழக்கில் சேர்க்க வேண்டாம். எனது குடும்பத் தாருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மகேஷ் ஷா தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து வருமான வரித் துறை அதிகாரிகளின் பிடியில் மகேஷ் ஷா சிக்கினார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.