

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடியின் அண்ணன் சோமாபாய், "மோடி தேசத்துக்காக கடினமாக உழைக்கிறார். அவர் கொஞ்சமாவது ஓய்வும் எடுக்க வேண்டும்" என்று கண்ணீர் மல்க அக்கறையுடன் கூறினார்.
குஜராத் சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடந்து முடிந்தது. அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அண்ணன் சோமாபாய் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், "2014 தொடங்கி இதுவரை மத்திய அரசு செய்துள்ள பணிகளை மக்கள் புறந்தள்ளிவிட முடியாது. மோடி நாட்டுக்காக நிறைய உழைக்கிறார். அவரை சந்திக்கும்போதெல்லாம் கொஞ்சம் ஓய்வும் தேவையென்று சொல்வேன்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
முன்னதாக, இன்று காலை 9.20 மணியளவில் அகமதாபாத்தில் சபர்மதி வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார். பின்னர் பேசிய அவர், " குஜராத் மக்கள் எல்லோரின் குரல்களையும் கேட்கின்றனர் ஆனால் அவர்கள் உண்மையை மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். அதுதான் அவர்களின் இயல்பு" என்று கூறியிருந்தார். வாக்களித்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடி சிறிதுதூரம் நடந்தே சென்று தனது சகோதரரின் இல்லத்தை அடைந்தார். அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் மோடி வாக்கு செலுத்திய பின்னர் சாலை பேரணியாக சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடைபெறும் நாளில் எந்த பிரச்சாரமும், பேரணியும் மேற்கொள்ளக்கூடாது என விதிமுறைகள் இருக்கின்றன. இதனால், பிரதமர் மோடியின் இந்த பேரணி குறித்து காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.