Published : 05 Dec 2022 07:56 AM
Last Updated : 05 Dec 2022 07:56 AM

இரட்டை சகோதரிகளை மணந்த இளைஞர்

இளைஞர் அதுலை திருமணம் செய்த இரட்டை சகோதரிகள் பிங்கி, ரிங்கி.

மும்பை: மகாராஷ்டிர தலைநகர் மும்பையைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் பிங்கி, ரிங்கி. பொறியியல் பட்டதாரிகளான இவர்கள் மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களது தந்தை அண்மையில் உயிரிழந்தார். பிங்கியும், ரிங்கியும் தாயுடன் வசித்து வந்தனர். தாய்க்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

மருத்துவமனைக்கு தாயை அழைத்துச் செல்ல இருவரும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் காரை வாடகைக்கு எடுத்தனர். அப்போது அந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் அதுல் என்பவருக்கும் இரட்டை சகோதரிகள் குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

பிங்கியும், ரிங்கியும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பார்கள். ஒரே பள்ளி, ஒரே கல்லூரி, ஒரே இடத்தில் வேலை என்று ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் வாழ்க்கையில் ஒன்றாக பயணம் செய்கின்றனர். திருமணத்துக்குப் பிறகு வெவ்வேறு வீடுகளுக்கு பிரிந்துச் செல்ல இருவருக்கும் விருப்பமில்லை. எனவே ஒருவரை திருமணம் செய்து ஒன்றாக குடும்பம் நடத்த சகோதரிகள் முடிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் அதுல் மீது இரட்டை சகோதரிகளுக்கு காதல் ஏற்பட்டது. தங்களது காதலை அதுலிடம் அவர்கள் தெரிவித்தனர். சகோதரிகளின் காதலை அவரும் ஏற்றுக் கொண்டார்.

மகாராஷ்டிராவின் சோலாப்பூர் பகுதியைச் சேர்ந்த அதுல் தனது பெற்றோரிடம் சம்மதம் கோரினார். அவர்களும் பச்சைக் கொடி காட்டியதால் கடந்த 2-ம் தேதி சோலாப்பூரின் அக்லுஜ் பகுதியில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது இரட்டை சகோதரிகள் பிங்கியும் ரிங்கியும் மணமகன் அதுலுக்கு மாலை அணிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த திருமணத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்திருக்கிறது.

திருமண வீடியோவைப் பார்த்த சமூக ஆர்வலர் ராகுல் என்பவர் அக்லுஜ் போலீஸ் நிலையத்துக்கு நேரடியாக சென்று புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x