Published : 05 Dec 2022 09:29 AM
Last Updated : 05 Dec 2022 09:29 AM

தாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி

குஜராத்தில் நடைபெறும் 2-ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தாயார் ஹீராபென்னை நேற்று சந்தித்து ஆசிபெற்ற பிரதமர் மோடி.

புதுடெல்லி: குஜராத்தின் காந்திநகரில் தனது தாயார் ஹீராபென்னை சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார்.

குஜராத் சட்டப்பேரவைக்கு 2-ம் கட்ட மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடைபெறுகிறது. கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜக - காங்கிரஸ் கட்சிகளுடன் ஆம் ஆத்மி கட்சியும் தீவிரமாக களமிறங்கி உள்ளது. இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தனது தாயார் ஹீராபென் வீட்டுக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். அப்போது, அவர் தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார்.

தேநீர் அருந்தியபடி தாயாரிடம் சிறிது நேரம் உரையாடினார். மோடி ஆசி பெற்ற படங்களை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ளது. அதில் ஒரு படத்தில், பிரதமர் மோடி கடந்த முறை தனது தாயாரை சந்தித்த போது ஹீராபென் கையால் உணவருந்தும் புகைப்படத்தின் பின்னணியில் இருவரும் அமர்ந்து தேநீர் அருந்தும் காட்சி இடம் பெற்றுள்ளது.

தேர்தல் சமயங்களில் தாயார் ஹீராபென்னிடம் ஆசி பெறுவதை பிரதமர் மோடி வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், குஜராத்தில் 93 தொகுதிகளுக்கு திங்கட்கிழமை (இன்று) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தனது தாயாரை பிரதமர் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடற்படைக்கு வாழ்த்து

ஆண்டுதோறும் டிசம்பர் 4-ம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பில் கடற்படையின் பங்கை அங்கீகரிக்கவும், கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய - பாகிஸ்தான் போரின் போது, ‘ஆபரேஷன் டிரைடென்ட்’ மூலம் கடற்படை நிகழ்த்திய சாதனைகளை நினைவுகூரும் வகையில், கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று டிசம்பர் 4-ம் தேதி நாடு முழுவதும் கடற்படை தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

மனிதாபிமான செயல்பாடு

இதை முன்னிட்டு கடற்படை வீரர்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘கடற்படை தினத்தில் அனைத்து கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியர்கள் என்ற முறையில் நமது கடற்படை வரலாற்றை நினைத்து பெருமை கொள்கிறேன். இந்திய கடற்படை நாட்டை உறுதியாக பாதுகாத்து வருகிறது. அத்துடன் சவாலான நேரங்களில் மனிதாபிமான உணர்வுடன் பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது’’ என்று பாராட்டி உள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, விசாகப்பட்டினத்தில் நேற்று கடற்படையின் வலிமையை பறைசாற்றும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தலைநகர் டெல்லிக்கு வெளியில் கடற்படைதினம் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், டெல்லியில் உள்ள தேசிய போர் நினை விடத்தில் கடற்படை தளபதி ஆர்.ஹரிகுமார், விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்ரி மற்றும் உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x