ரொக்கமில்லா பரிவர்த்தனை: ராகுல் கேள்வியும் மோடி பதிலும்

ரொக்கமில்லா பரிவர்த்தனை: ராகுல் கேள்வியும் மோடி பதிலும்
Updated on
1 min read

மத்திய அரசு தீவிரமாக முன்னெடுக்கும் ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஏழை மக்களைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

அதற்கு பதில் சொல்லும் விதமாக, பிரதமர் மோடி விளக்கம் அளித்ததுடன், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராகுல் சரமாரி தாக்கு:

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரில் காங்கிரஸ் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில், காங்கிரஸ் துணைத் தலைவர் ஆவேசமாகப் பேசினார்.

அப்போது ரொக்கமில்லா பரிவர்த்தனை பற்றி அவர் பேசும்போது, "பண மதிப்பு நீக்கம் என்பது கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான போர் அல்ல. அது ஏழைகள், விவசாயிகள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான போர்.

ஏழைகளின் பணத்தை மட்டும் மோடி காலியாக்கவில்லை; அவர்களின் ரத்தத்தையும் உறிஞ்சிவிட்டார்.

நீங்கள் (விவசாயிகள்) வியர்வை சிந்தி சம்பாதித்த பணம் உங்களிடம் இருப்பதை மோடி விரும்பவில்லை. அந்தப் பணம் வங்கியிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

நான் சொல்வதை நீங்கள் நம்பாவிட்டால் பரவாயில்லை. நம்பாதீர்கள். வரும் மாதங்களில் உங்களுக்கே தெரியும்.

ரொக்கமில்லா பரிவர்த்தனை என்றால் என்ன என்று நான் சொல்கிறேன். நீங்கள் 100 ரூபாயை கடையில் கொடுத்து பொருள் வாங்குகிறீர்கள். எளிமையாக முடிந்துவிடுகிறது.

ரொக்கமில்லா பரிவர்த்தனையில், வேறு வழிகளில் நீங்கள் பணம் செலுத்தினால், அதில் 5 சதவீதம் அந்த 50 ஊழல் குடும்பங்கள் வைத்துள்ள வங்கி கணக்கில் நேரடியாக சென்று விடும்.

நாங்கள் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு எதிரிகள் அல்ல. ஆனால், அதை மக்களிடம் வலுக்கட்டாயமாக திணிக்க கூடாது" என்றார் ராகுல் காந்தி.

மோடியின் பதிலடி

சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, "இந்தியாவில் சாதாரண மக்களுக்கு மறைந்த ராஜிவ்காந்தி கணிப்பொறியும், மொபைல்போனும் கொண்டு வந்தார் என காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி கூறுகின்றனர்.

அந்த மொபைல் போனை ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தலாம் என நான் கூறினால், ஏழைகளிடம் மொபைல்போன் இல்லை என்றும், வங்கிக் கணக்கு இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஏடிஎம் மையங்களின் முன்பாக வரிசையில் காத்திருக்கும் மக்களை தூண்டிவிட்டு, திட்டமிட்டு வன்முறையை உருவாக்கும் முயற்சியும் ஆங்காங்கே நடக்கிறது. ஆனால், சாதாரண மக்கள் மிகவும் பொறுமைசாலி. நாட்டு நலனுக்காகத் தான் இந்த சிரமத்தை அனுபவிக்கிறோம் என அவர்கள் புரிந்துகொண்டிருப்பதால், இதுபோன்ற சதி திட்டங்கள் பலன் அளிப்பதில்லை" என்றார் மோடி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in