

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குரின் பதவிக்காலம் வரும் ஜனவரி 3-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹரை நியமிக்க கடந்த 19-ம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் அவரை தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘உச்ச நீதிமன்றத்தில் 4-வது மூத்த நீதிபதியாக ஜே.செல்லமேஷ்வர் தான் பதவி வகித்து வருகிறார். எனவே நீதிபதி கேஹருக்கு பதிலாக அவரைத் தான் தலைமை நீதிபதியாக பணியமர்த்த வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
இம்மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், ‘‘நாட்டின் புதிய தலைமை நீதிபதி பதவிக்கு ஜே.எஸ்.கேஹர் நிய மிக்கப்பட்டதற்கான அறிவிக் கையை ஏற்கெனவே குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டு விட்டார். இதனால் இம்மனு தாக்கல் செய்ததில் எந்த பலனும் இல்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம்’’ என தெரிவித்தனர்.