

ஜி20 கூட்டமைப்புக்கு தலைமை ஏற்றுள்ளதன் மூலம் சர்வதேச அமைதியை கட்டமைக்க பிரதமர் மோடி உதவுவார் என பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரோன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம். இந்தியா ஜி20 கூட்டமைப்பின் தலைமையை ஏற்றுள்ளது. இந்த வேளையில் எனது நண்பர் நரேந்திர மோடி அமைதியை கட்டமைத்து, நீடித்த வளர்ச்சி காணும் உலகை உருவாக்க உதவுவார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உலகில் பொருளாதார ரீதியாக சக்திவாய்ந்த 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி20-ன் தலைமைப் பொறுப்பை இந்தியா முறைப்படி டிசம்பர் 1ஆம் தேதி ஏற்றுக் கொண்டது.
இதனையொட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று, ஜி20 கூட்டமைப்புக்கு தலைமை ஏற்றுள்ள எனது நண்பர் மோடி, "தன் தலைமையின் கீழ் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பார். இந்தியா அமெரிக்காவின் வலுவான கூட்டாளி. ஜி20 தலைமைக் காலத்தில் என் நண்பருக்கு நான் உதவியாக இருப்பேன். ஒன்றிணைந்து நீடித்த, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்யலாம். காலநிலை, எரிசக்தி, உணவு தட்டுப்பாட்டு சவால்களை சேர்ந்தே எதிர்கொள்ளலாம்" என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கிண்டல்: காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜி20 தலைமை என்பது சுழற்சி முறையில் அதன் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படுகிறது. அப்படித்தான் இந்தியாவுக்கும் இந்த தலைமை வந்துள்ளது. இதற்குமுன் ஜி20 தலைமையைப் பெற்ற எந்த ஒரு தேசமும் இப்படியொரு நாடகத்தை நடத்தியதில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு 2014ல் குஜராத் மாநிலம் காந்திநகரில் பேசிய எல்.கே.அத்வானி கூறியதுதான் நினைவுக்கு வருகிறது. மேடையில் பேசிய அத்வானி, மோடி ஒரு சிறந்த நிகழ்ச்சி மேலாளர் என்று விமர்சித்தார். ஜி20 தலைமைக்குப் பின்னால் உள்ள கொண்டாட்டங்களை எல்லாம் இப்படித்தான் பார்க்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.