Published : 03 Dec 2022 08:42 AM
Last Updated : 03 Dec 2022 08:42 AM

குஜராத்தில் ஓங்கி ஒலிக்கும் யோகி ஆதித்யநாத்தின் ‘புல்டோசர் மாடல்' - தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவின் புதிய வியூகம்

ஆர்.கே.மிஸ்ரா

குஜராத்தில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 1995-ம் ஆண்டு முதல் 6 முறை ஆட்சி அமைத்துள்ள பாஜக, 7-வது முறையாக ஆட்சியை தக்கவைத்து கொள்ள புதிய வியூகங்களை வகுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

மாநிலத்தின் 89 தொகுதிகளில் நேற்று முன்தினம் முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக வரும் 5-ம் தேதி 93 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுவாக பாஜகவின் தேர்தல் பிரச்சாரங்களில் ‘குஜராத் மாடல்' வளர்ச்சி கோஷம் ஓங்கி ஒலிக்கும். இந்த கோஷத்தை முன்னிறுத்தியே குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டில் நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.

ஆனால் தற்போதைய குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகதனது தேர்தல் பிரச்சார வியூகத்தை மாற்றியுள்ளது. அந்த கட்சியின் பிரச்சார கூட்டங்களில் உத்தர பிரதேச முதல்வர் யோகிஆதித்யநாத்தின் "புல்டோசர்மாடல்" கோஷம் ஓங்கி எதிரொலிக்கிறது.

மாநிலம் முழுவதும் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் புல்டோசர்களில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். முதல்வர் யோகி ஆதித்ய நாத் அண்மையில் சூரத்தில் பிரச்சாரம் செய்தபோது சாலைகளில் புல்டோசர்கள் அணிவகுத்து சென்றன.

“எங்களது புல்டோசர்களால் உத்தர பிரதேசத்தில் வன்முறை ஒழிந்து அமைதி தவழ்கிறது" என்றுயோகி ஆதித்யநாத் கர்ஜித்தபோது கூட்டத்தில் சுனாமி பேரலையாக ஆரவாரம் எழுந்தது. அவர் பிரச்சாரத்துக்கு சென்ற இடமெல்லாம் "புல்டோசர் பாபா" என்று தொண்டர்கள் முழக்கமிட்டனர்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே ‘புல்டோசர் மாடல்' ஆட்சிக்கு குஜராத் அரசுமாறிவிட்டது. அண்மையில் கட்ச்பிராந்தியத்தின் ஜகவ் துறைமுகபகுதியில் புல்டோசர்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கடந்த அக்டோபரில் இந்துக்களின் புனிதத்தலமான துவாரகாவில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் புல்டோசர்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

அங்கு அண்மையில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “முதல்வர் பூபேந்திர படேல் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றி துவாரகாவின் பெருமையை மீட்டிருக்கிறார்" என்று புகழாரம் சூட்டினார்.

இதே விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “துவாரகாவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற காங்கிரஸ் தடைக்கல்லாக இருக்கிறது. யார் தடுத்தாலும் புல்டோசர்கள் நிற்காது. துவாரகாவின் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து இடித்து அகற்றப்படும்" என்று உறுதி அளித்தார்.

நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் ‘குஜராத் மாடல்' வளர்ச்சியைமுன்னிறுத்தி பாஜக பிரச்சாரம் செய்து வந்த நிலையில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் யோகியின் ‘புல்டோசர்மாடல்' வளர்ச்சி முன்னிறுத்தப்படுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தீயை பற்ற வைத்திருக்கிறது.

கடந்த 2017 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன், ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள், குடிநீர், கழிப்பறை வசதி,இளைஞர்களின் சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்காக ரூ.1,000கோடி, மாணவிகளுக்கு இலவசஉயர்க் கல்வி, மக்கள் மருத்துவமனைகள், மக்கள் மருந்தகங்கள் உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜக அளித்தது.

தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பொது சிவில் சட்டம் அமல் செய்யப்படும், திரைமறைவில் ஒளிந்திருக்கும் தீவிரவாதிகளை கண்டறிய தனிப்படைஅமைக்கப்படும், பொது சொத்துகளை சேதப்படுத்துவோரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும், மேற்கு இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக சுற்றுலா தலமாக துவாரகா மேம்படுத்தப்படும், ரூ.1,000 கோடியில் கோயில்கள் புனரமைக்கப்படும், கட்டாய மதமாற்றத்துக்கு கடும் தண்டனை விதிக்கப்படும், 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜக வழங்கியிருக்கிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக அளித்த வாக்குறுதிகளுக்கும் இப்போதைய தேர்தல் வாக்குறுதிகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. உள்அர்த்தங்களும் இருக்கின்றன என்று அரசியல் நோக்கர்கள் அறுதியிட்டு கூறியுள்ளனர்.

பொதுவாக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக நாட்டின் பிரதமர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவது இந்திய தேர்தல் வரலாற்றில் மிகவும் அரிதாகும். இந்த மரபை தாண்டி பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் அதிதீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். சூரத்தில் 25 கி.மீ.,அகமதாபாத்தில் 50 கி.மீ. தொலைவுக்கு மிக நீண்ட வாகன பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டது ஆளும் பாஜகவினரையே வியப்பில்ஆழ்த்தி உள்ளது.

குஜராத் தேர்தல் களம் அனலாக கொதிக்கும் நிலையில் வரும் 8-ம் தேதி தேர்தல் முடிவுகள்அறிவிக்கப்பட உள்ளன. அன்றையதினம் இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளன. இரு மாநில தேர்தல் முடிவுகள், மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுவதால் ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x