

நாடாளுமன்றத்தில் நேற்று உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் அளித்த பதில்களின் சுருக்கம்:
பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்: கிராம பஞ்சாயத்துகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள 14-வது நிதிக்குழு பரிந்துரை அடிப்படையில் நிதி அளிக்கப்பட்டு வருகிறது. 2015 முதல் 2020 வரையிலான 5 ஆண்டு காலத்துக்கு கிராம பஞ்சாயத்துகளுக்கு 2 லட்சத்து 292.20 கோடி வழங்கப்பட்டுள்ளது. குடிநீர், சுகாதாரம், வடிகால், சமுதாய சொத்துகள் பராமரிப்பு, சாலைகள், நடைபாதை, தெரு விளக்குகள் ஆகியவற்றுக்காக இத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
வெளியுறவு இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர்: பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்தும் இதனால் இந்தியா உள்ளிட்ட இப்பிராந்திய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் சீனாவிடம் மத்திய அரசு தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறது. குறிப்பாக ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதி மசூத் அசார் விவகாரத்தில் சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங்: கடந்த அக்டோபரில் கோவாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டுக்கான ‘லோகா’ போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டது. சுதீப் சுபாஸ் காந்தி என்பவர் இதை அனுப்பியிருந்தார். பிற நாட்டினரை வரவேற்கும் வகையில் நமஸ்தே என்ற வார்த்தை இந்த லோகோவின் நடுவில் உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவின் தேசிய மலரான தாமரையை இந்த லோகோ பிரதிபலிக்கிறது. தாமரை செழுமையை குறிக்கிறது. இந்தியா செழுமையை நோக்கிச் செல்வதாலும் பிரிக்ஸ் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் நிறங்களுக்காகவும் இதை தேர்வு செய்தோம்.