பண மதிப்பு நீக்க நடவடிக்கை விவகாரம்: சோனியா தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க முக்கிய கட்சிகள் மறுப்பு

பண மதிப்பு நீக்க நடவடிக்கை விவகாரம்: சோனியா தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க முக்கிய கட்சிகள் மறுப்பு
Updated on
1 min read

பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்க முக்கிய அரசியல் கட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்து மத்திய அரசை எதிர்த்தன. இதனால் தொடர் முழுவதும் முடங்கியது.

இதையடுத்து அடுத்தகட்ட போராட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்ட் உட்பட 16 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனிடையே, ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இந்தக் கூட்டத் தில் பங்கேற்கப் போவதில்லை என நேற்று தெரிவித்தன.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று கூறும்போது, “அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு ஒருமித்த கருத்துடன் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும்” என்றார்.

ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.தியாகி கூறும்போது, “இது தொடர்பாக குறைந்தபட்ச செயல் திட்டம் எதுவும் இல்லை. இந்த நிலையில் நடைபெறும் கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும்” என்றார்.

எனினும், பிஹாரில் ஆளும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இதில் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in