Published : 02 Dec 2022 04:54 PM
Last Updated : 02 Dec 2022 04:54 PM

பாஜக மீதான மக்களின் அதிருப்தி குஜராத் தேர்தல் முடிவில் எதிரொலிக்கும்: கார்கே

மல்லிகார்ஜுன கார்கே

பிலோடா: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் அருதிப் பெரும்பான்மை பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு நேற்று (டிச.1) முதற்கட்டத் தேர்தல் நடைபெற்றது. இதில், 59 சதவீத வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்டத் தேர்தல் 93 தொகுதிகளுக்கு வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. நாளையுடன் இங்கு தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய இருக்கிறது. இந்நிலையில், குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பனாஸ்கந்தா மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள ஓகாநாத் கோவிலில் இன்று (டிச. 2) அவர் சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில், குஜராத்தின் பிலோடா என்ற பகுதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். வேலைவாய்ப்பு தொடர்பான வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை என விமர்சித்த அவர், ஆனால், இதற்கும் காங்கிரசை குற்றம்சாட்டுவீர்களா என பாஜகவை நோக்கி அவர் கேள்வி எழுப்பினார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்துவிட்டதை மல்லிகார்ஜுன கார்கே சுட்டிக்காட்டினார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 107.09 டாலராக இருந்ததாகவும், அது தற்போது 87.55 டாலராக குறைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், 2014ம் ஆண்டு மே மாதம் 16-ம் தேதி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 71.51 ஆக இருந்ததாகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 57.28 ஆக இருந்ததாகவும் தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.72 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 89.62 ஆகவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் சந்தையில் பெட்ரோல், டீசலின் விலை அதிகமாகவே விற்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

பாஜக மீது மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறிய மல்லிகார்ஜுன கார்கே, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் அது எதிரொலிக்கும் என்றார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அருதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x