Published : 02 Dec 2022 06:56 AM
Last Updated : 02 Dec 2022 06:56 AM

காசியில் கண்டது தமிழனுக்கு ராஜமரியாதை

கோப்புப்படம்

செஞ்சி பிரபு

காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்பதற்கான 3-வது குழுவுடன், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நவ.22-ம் தேதி சரியாக காலை 9.15 மணிக்கு கிளம்பியது கயா எக்ஸ்பிரஸ். குளிர்சாதன வசதி கொண்ட மூன்று டயர் பெட்டிகள் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருந்தன.

விஜயவாடா, ஜபல்பூர், நாக்பூர் என ரயில் செல்லும் வழியெங்கும் தரப்பட்ட வரவேற்பு மெய்சிலிர்க்க வைத்தது. தமிழ் இல்லாத அந்த மாநிலங்களில், ‘வணக்கம் காசி’, ‘வாழ்க தமிழ்’ என்ற முழக்கங்களுடன் தரப்பட்ட வரவேற்பும், பேண்ட் வாத்தியங்களும், பூமாலைகளும் நம்மை ஆச்சரியப்படுத்தியது.

காசிக்கு 15 கி.மீ. தொலைவில் உள்ள தீன தயாள் உபாத்யாயா ரயில் சந்திப்பில் ரயில் நுழைந்தபோது, சந்தௌலி மாவட்ட ஆட்சியர் இஷா துகன், எஸ்.பி.அன்கூர் அகர்வால் தலைமையில், நூற்றுக்கணக்கானோர் திரண்டு அளித்த வரவேற்பு பிரமிக்க வைத்தது.

மலைக்க வைத்த பேரன்பு

தமிழ் யாத்ரீகர்களுக்கு விரிக்கப்பட்ட சிவப்பு கம்பளம், ஒவ்வொருவர் கழுத்திலும் விழுந்த குறைந்தது 10 மாலைகள்,பெரும் உடுக்கையில் இசைக்கப்பட்ட ருத்ர கானம், ‘பாரத் மாதாகி ஜே’, ‘வணக்கம் காசி’, ‘தமிழ் வாழ்க’, ‘காசி தமிழ் சங்கமம் வாழ்க’ என்ற முழக்கங்களுடன் அவர்கள் காட்டிய பேரன்பு நம்மை மலைக்க வைத்தது.

காசி நகரில் இருவருக்கு ஓர் அறை,இரு படுக்கை என்ற வகையில் அனைவருக்கும் குளிர்சாதன அறைகள் தயாராக இருந்தன. மறுநாள் காலையில் காசி விசுவநாதர் கோயில் தரிசனம். விவிஐபிக்கள் வரும் அதே வழியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோஜா மலர்கள் தூவி, புரோகிதர்களின் வேத மந்திரங்கள் முழங்க அளிக்கப்பட்ட வரவேற்பில் திக்குமுக்காடிப் போனோம்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்றிருக்க, காசி தமிழ் யாத்ரீகர்களை மட்டும் முதல் வரிசையில் அனுப்பி,கங்கா தீர்த்தத்தை அவர்களே பித்தளை குவளையில் எடுத்து தந்து, விசுவநாதரை தரிசிக்க வைத்தது... இவையெல்லாம் இந்த ஜென்மத்தில் தமிழர்கள் செய்த புண்ணியம்தான். விநாடிகளில்தான் தரிசனம் என்றாலும் விசுவநாதரை தரிசித்துவிட்ட பேறு, வாழ்வின் இலக்குகளை பூர்த்தி செய்துவிட்ட உணர்வை தந்தது.

சுவாமி தரிசனத்துக்குப் பின், பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்த தமிழ் யாத்ரீகர்கள், சிவநாமத்தை பாடி மகிழ்ந்தனர். ‘ஹர ஹர மஹாதேவ்’ முழக்கத்துடன் ‘நமச்சிவாய’ முழக்கமும் இணைந்து ஒலித்தது. அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு, ருத்ராட்ச மாலை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

தொடர்ந்து, கங்கை தரிசனத்துக்கு அழைத்துச் சென்றார், வெங்கட ரமண கனபாடிகள். காசி கோயில் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள முதல் தமிழர் இவர்தான். இவரோடு வந்த கோயிலின் தலைமை அதிகாரி சுனில் குமார் வர்மா, கோயிலின் அமைப்பு, கட்டுமானம், திட்டமிடல் குறித்து விவரித்தார்.

இதையடுத்து, காரைக்குடி நகரத்தார் நிர்வகிக்கும் காசி விசாலாட்சி கோயில், அன்னபூரணி கோயிலில் அம்பாள் தரிசனம். தொடர்ந்து கோயில் வளாக மண்டபத்திலேயே மதிய உணவு பரிமாறப்பட்டது. பின்னர் காசி பைரவர் வழிபாடு.

மாலை 5.30 மணிக்கெல்லாம் இரவு கவ்விக்கொள்ள, கங்கையில் படகுப் பயணம் தொடங்கியது. சொகுசுப் படகின் மாடத்தில் அமர்ந்து தேநீர் சுவைத்தபடி நிகழ்ந்த கங்கைப் பயணம் சுகமான அனுபவம். அனைவரும் பேராவலுடன் காத்திருந்த கங்கா ஆரத்தி ஆறேகால் மணிக்கெல்லாம் தொடங்கிவிட்டது. அதைக் காண கண்கோடி வேண்டும்.

மறுநாள் காலை 5.30 மணிக்கெல்லாம் கங்கையில் புனித நீராடல். அதுவும் மகாகவி புழங்கிய ஹனுமன் படித்துறையில் (ஹனுமன் காட்). இளஞ்சூரியனின் செங்கதிர்கள் நீர் முழுக்க நிறைந்திருக்க தரிசனம் தந்தால் அன்னை கங்கா. என்ன ஒரு பிரம்மாண்டம்... மனதுக்குள் ரம்மியம் புகுந்து மனதை சாந்தப்படுத்தியது. அனைத்து பார(வ)ங்களும் நம்மைவிட்டு நீங்கியதைப் போலமனம் லேசானது. புத்துணர்ச்சி குடி கொண்டது.

மகாகவி பாரதி இல்லத்தில் மறுநிர்மாணப் பணிகள் நடந்து வந்ததால் வெளியில் இருந்தவாறே பார்க்க முடிந்தது. காஞ்சி சங்கர மடத்தில் அனைவருக்கும் தேநீர் அளித்து உபசரித்தனர்.

கலாச்சார நிகழ்ச்சிகள்

இதைத்தொடர்ந்து, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், எழுத்தாளர் மாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புத்தகங்கள், பாரம்பரிய கைவினைப் பொருட்கள், கைத்தறி, பட்டுத் துணிகளின் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து அன்று மாலை சாரநாத் பயணம்.

மறுநாள் குளிர்சாதன பேருந்தில் பிரயாக்ராஜ் பயணம் தொடங்கியது. திரிவேணி சங்கமத்தின் கரைப்பகுதியை அடைந்தபோது, பள்ளிக் குழந்தைகள் பேண்ட் வாத்தியங்களை முழங்கியபடி மலர்களைத் தூவி வரவேற்றனர். கங்கை, யமுனை மற்றும் கண்ணுக்கு புலப்படாத சரஸ்வதி நதிகள் இணையும் சங்கமப் பகுதிக்கு புனித நீராட படகில் அழைத்துச் செல்லப்பட்டோம்.

அதைத் தொடர்ந்து, அருகில் இருந்த அக்பர் கோட்டையில் பைரவர், காளி, சனீஸ்வரர், எமதர்மர் உள்ளிட்ட கடவுளர்கள் வீற்றிருந்த பாதாள கோயிலில் தரிசனம். 4 யுகங்களாக நிலைத்திருப்பதாக நம்பப்படும் ஆலமரம் இருக்கும் ‘விருட்ச்மந்திர்’ கோயில் அங்கு உள்ளது. இதையடுத்து, சந்திரசேகர ஆசாத் நினைவிடத்துக்கு அழைத்துச் சென்றனர். பிரிட்டீஷாருடன் துப்பாக்கிச் சண்டையிட்ட அந்த மாவீரன் மீசையை முறுக்கியபடி கம்பீரத்துடன் நின்றிருந்தார்

இரவில், நட்சத்திர விடுதி போல் ஜொலித்த அயோத்தி ரயில் நிலையம் வந்தடைந்தோம். அங்கு, அயோத்தி எம்பி.லாலு சிங் தலைமையில் நாட்டுப்புறக் கலைஞர்கள் மேளதாளங்கள் முழங்க ஆடல் பாடலுடன் வரவேற்றனர்.

மறுநாள் ஸ்ரீராம பிரானை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால்,அருகில் உள்ள இடத்தில் தற்காலிகமாக குழந்தை ராமர் (ராம் லல்லா) சிலை பாலாலயம் செய்யப்பட்டுள்ளது.

புனித பயணத்தின் நிறைவுப் பகுதியாக பனாரஸ் ரயில் நிலையத்துக்கு புறப்பட்டோம். அதுவரை உடன் பயணித்த ஐஆர்சிடிசி சுற்றுலா மேலாளர்கள் உள்ளிட்டோர், உறவினர்களைப் போல கையசைத்து விடைகொடுத்தது கனத்த நிமிடங்களாய் அமைந்தது.

காசியில் பேருந்தில் பயணித்தபோது, பார்க்கும் பொதுமக்கள் எல்லோரும் உற்சாகத்தோடு கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர். இந்தியை எதிர்க்கும் தமிழகத்திலிருந்து வந்திருக்கிறோம் என்பதை அறிந்தேதான் அவர்கள் தமிழ் யாத்ரீகர்களை வரவேற்றனர். மொத்தத்தில் பண்பாட்டு ஒருங்கிணைப்பு மூலம் தமிழகத்தை நோக்கிய விருப்பு அரசியலை முன்வைத்திருக்கிறார் பிரதமர் மோடி.

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள்

காசி பயணத்துக்கு பாண்டிச்சேரி பல்கலை. முதுகலை தமிழ் மாணவர்கள் 30 பேரும், சில முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களும் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- செஞ்சி பிரபு


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x