Published : 02 Dec 2022 07:57 AM
Last Updated : 02 Dec 2022 07:57 AM

டெல்லி, பெங்களூரு, வாரணாசி விமான நிலையங்களில் டிஜி யாத்திரை திட்டம் தொடக்கம்

கோப்புப்படம்

புதுடெல்லி: டெல்லி, பெங்களூரு, வாரணாசி ஆகிய 3 விமான நிலையங்களில் டிஜி யாத்ரா (டிஜிட்டல் யாத்திரை) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, எவ்வித காகித ஆவணமும் இல்லாமல் முகத்தைக் காட்டிவிட்டு உள்ளே செல்ல முடியும்.

டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் டிஜி யாத்திரை திட்டத்தை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, “டிஜி யாத்திரை திட்டம் முதல் கட்டமாக டெல்லி, பெங்களூரு, வாரணாசி ஆகிய 3 விமான நிலையங்களில் இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தா, புனே, ஹைதராபாத் மற்றும் விஜயவாடா ஆகிய 4 விமான நிலையங்களில் டிஜி யாத்திரை தொடங்கப்படும்” என்றார்.

டிஜி யாத்திரை திட்டத்தின் கீழ், விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள், அடையாள அட்டை மற்றும் விமான நிலைய நுழைவுச் சீட்டு (போர்டிங் பாஸ்) ஆகிய காகித ஆவணங்களைக் கொண்டுவரத் தேவையில்லை. மாறாக, விமான நிலையத்துக்குள் நுழையும்போதும், பாதுகாப்பு சோதனை மற்றும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பும் அங்குள்ள பயணிகளை அடையாளம் காணும் கருவியில் தங்கள் முகத்தைக் காட்டினால் போதும். ஆனால் டிஜி யாத்திரை செயலியில் தங்கள் படம் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும்.

பதிவு செய்வது எப்படி

முதலில் தங்கள் செல்போனில் டிஜி யாத்திரை செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில் பெயர், இ-மெயில், செல்போன் எண் மற்றும் ஆதார் அல்லது இதர அடையாள ஆவண விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்போது செல்பி எடுக்குமாறு கோரிக்கை வந்ததும், செல்பி எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பின்னர் டிஜி யாத்திரை அடையாள எண் ஒதுக்கப்படும். விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இந்த அடையாள எண்ணை தெரிவிக்க வேண்டும். பின்னர் விமான நிறுவனங்கள் பயணியின் விவரங்கள் மற்றும் டிஜி யாத்திரை அடையாள எண்ணை விமான நிலையத்துடன் பகிர்ந்து கொள்ளும்.

டிஜி யாத்திரை செயலி

டிஜி யாத்திரை செயலியில் பதிவு செய்தவர்கள் தனி நுழைவுவாயில் மூலம் விமான நிலையத்தில் செல்ல வேண்டும். அப்போது ஏற்கெனவே டிஜி யாத்திரை செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல்கள் அங்குள்ள கருவியில் இருக்கும். அதில் உங்கள் முகத்தைக் காட்டியதும் சரிபார்த்து அதனுடன் பொருந்தினால் உங்களை உள்ளே செல்ல அனுமதிக்கும்.

இதுதவிர, டிஜி யாத்திரை திட்டம் தொடங்கப்பட்டுள்ள விமான நிலையங்களில் இப்போது உள்ள வழக்கமான நடைமுறையும் தொடரும்.

டிஜி யாத்திரை செயலியில் பதிவு செய்தவர்கள் அடையாள அட்டை, விமான நிலைய நுழைவுச் சீட்டு ஆகிய ஆவணங்களை கொண்டுவரத் தேவையில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x