குழப்பும் போக்குவரத்து சிக்னல் போன்றது மோடி அரசு: ராகுல் கிண்டல்

குழப்பும் போக்குவரத்து சிக்னல் போன்றது மோடி அரசு: ராகுல் கிண்டல்
Updated on
1 min read

‘சாலை சந்திப்புகளில் பழுதாகி அனைத்து வண்ணங்களையும் காட்டும் குழப்பமான போக்குவரத்து சிக்னலைப் போல நரேந்திர மோடி அரசு செயல்படுகிறது’ என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கடந்த நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, புழக்கத்தில் உள்ள அனைத்து 500, 1000 நோட்டுகளையும் செல்லாதவை என அறிவித்தார்.

பொதுமக்கள் 500, 1000 நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்தலாம் என்றும் அறிவித்திருந்தார். இந்த காலக்கெடுவுக்குள் எவ்வித விசாரணையும் இன்றி, வரம்புமின்றி பழைய நோட்டுகளை வங்கிகளில் செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட அறிக்கையில், ரூ. 5 ஆயிரத்துக்கு அதிகமான தொகையை, ஒரே முறை, ஒரு வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்த முடியும் எனக் கூறப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி விதவிதமாக தனது ஆடைகளை மாற்றுவதுபோல, ரிசர்வ் வங்கி விதிகளும் மாறுகின்றன என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் செவ்வாயன்று விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று ராகுல் தனது ட்விட்டர் வலைதளப் பக்கத்தில், பழுதான போக்குவரத்து சிக்னல் கம்பம் ஒன்றில், ஒரே நேரத்தில் சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பல வண்ணங்கள் தோன்றும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ‘பண மதிப்பு நடவடிக்கைக்குப் பிறகு அரசு உத்தரவுகள் இப்படித்தான் இருக்கின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலாவும், தனது ட்விட்டர் பக்கத்தில், ரிசர்வ் வங்கியை, ‘ரிவர்ஸ்’ வங்கி எனக் குறிப்பிட்டு நையாண்டி செய்துள்ளார். ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை மாறும் வானிலை அறிக்கை போல, ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியாகிக் கொண்டிருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

‘பிரதமரின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை முதலில் ஆதரித்த ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தற்போது இதனால் சாதாரண மக்களுக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக புகார் கூறத் தொடங்கியுள்ளார்.

அவர் தேஜ கூட்டணியில் அங்கம் வகிப்பதோடு, பண மதிப்பு நீக்க நடவடிக்கைக் குழுவின் தலைவர் பொறுப்பிலும் இருக்கிறார். இன்னும் என்ன ஆதாரம் வேண்டும் மோடிஜி?’ என்றும் ரன்தீப் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in