கர்நாடக பாஜக மூத்த தலைவர் டி.ஹெச்.சங்கர மூர்த்தி தமிழக ஆளுநர்?

கர்நாடக பாஜக மூத்த தலைவர் டி.ஹெச்.சங்கர மூர்த்தி தமிழக ஆளுநர்?
Updated on
1 min read

கர்நாடக பாஜக மூத்த தலைவரான டி.ஹெச்.சங்கர மூர்த்தியை தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறை வடைந்தது. இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிய நஜ்மா ஹெப்துல்லா, குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலகிய ஆனந்திபென் படேல் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

இந்நிலையில் கர்நாடகா மாநில பாஜக மூத்த‌ தலைவரும், சட்டமேலவை உறுப்பினருமான டி.ஹெச்.சங்கர மூர்த்தியை தமிழக ஆளுநராக நியமிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்பு பரிந்துரை செய்தது. எனவே டி.ஹெச்.சங்கர மூர்த்தியை தமிழக ஆளுநராக‌ நியமிக்க பாஜக மேலிடம் முடிவெடுத்தது.

இதற்கு அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து மஹாராஷ்டிரா ஆளுநராக உள்ள வித்யாசாகர் ராவை தமிழகத்தின் தற்காலிக ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. தற்போது ஜெயலலிதா மறைந்துவிட்டதால், தமிழகத்துக்கு டி.ஹெச்.சங்கர மூர்த்தியை ஆளுநராக நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக டி.ஹெச்.சங்கரமூர்த்தி ‘தி இந்து'விடம் கூறியதாவது, “எனக்கு ஆளுநர் பதவி வழங்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக அமித் ஷாவும், ராஜ்நாத் சிங்கும் தெரிவித்தனர். தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றில் என்னை ஆளுநராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் எந்த மாநிலம் என்பதை தெரிவிக்கவில்லை. இதேபோல என்னை ஜெயலலிதா எதிர்த்ததாக கூறுவதிலும் உண்மை இல்லை''என தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரான டி.ஹெச்.சங்கர மூர்த்தி (76) கர்நாடகாவில் அக்கட்சியை வளர்க்கப் பாடுபட்டவர். 1966-ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்த இவர், தற்போது வரை நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்.

நெருக்கடி காலத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய தால் 19 மாதங்கள் பெலகாவி சிறையில் அடைக்கப்பட்டார். இதன்பிறகு 1988-ம் ஆண்டு கர்நாடக சட்டமேலவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப் பட்டார். கடந்த 25 ஆண்டுகளாக சட்டமேலவை உறுப்பினராக உள்ள இவர், சட்டமேலவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். எடியூரப்பா தலைமையிலான பாஜக‌ ஆட்சியில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in