

‘புதிய ரயில்கள்’ அறிவிப்பு உள்ளிட்ட கவர்ச்சிகரத் திட்டங்கள் ரயில்வே துறையின் வளர்ச்சிக்கு வித்திடவில்லை, எனவே கவர்ச்சிகரத் திட்டங்களை விட திட்டமிட்ட வணிகமயமாக்கமே வளர்ச்சிக்கு வித்திடும் என்ற தொனியில் அருண் ஜேட்லி பேசியுள்ளார்.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டையும் சேர்த்து தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பயணிகள் ரயில்வேயிலிருந்து பெறும் சேவைகளுக்கு அதற்குரிய தொகையைச் செலுத்தியாக வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
கவர்ச்சிகரத் திட்டங்களில் கவனம் செலுத்தாமல் ரயில் நிலைய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, ரயில்வே சொத்துகளை வணிக நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி அதன் மூலம் வருவாயைப் பெருக்குவது, ரயில் உணவு சேவைப்பிரிவை தனியார் ஒப்பந்தங்களுக்கு விட்டுவிடுவது. முக்கியமாக ரயில்வே மூலம் பயணிகள் பெறும் சேவைகளுக்கு அவர்கள் அதற்குரிய தொகையைச் செலுத்தச் செய்வது.
அருண் ஜேட்லி ரயில்வே துறை பற்றி கூறும்போது, “ரயில்வே துறையில் செயல்திறனை கவர்ச்சி விஞ்சி விட்டது. எந்த ஒரு நிறுவனத்தையும் நடத்துவதன் முதன்மை சாராம்சமான கொள்கை என்னவெனில் குறிப்பாக வணிக ரீதியான ஒரு நிறுவனத்தை நடத்துவது என்பதன் சாராம்சம் நுகர்வோர் தாங்கள் பெறும் சேவைக்கு உரிய தொகையைனை செலுத்தச் செய்வதே” என்றார் அருண் ஜேட்லி.
இன்று “இந்திய ரயில்வேயில் கணக்கியல் சீர்த்திருத்தங்கள் தேசிய மாநாட்டில்” அருண் ஜேட்லி இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கும் போது, 1990-களில் மின்சாரத்துறை ஏன் கடனில் திணறியது? காரணம் மக்கள் தாங்கள் பெறும் சேவைகளுக்கு உரிய தொகையினை செலுத்தவில்லை. 2003-ல்தான் இத்துறை சீர்த்திருத்தங்கள் வந்த பிறகு நிலைமை சீரானது. மாறாக நெடுஞ்சாலைத் துறை பெரிய அளவில் வளரக்காரணம் மக்கள் சுங்கவரி, எரிபொருளின் மீது கூடுதல் வரிகளைச் செலுத்தினர் என்று கூறிய ஜேட்லி,
“எனவே உலகம் முழுதும் மக்கள் தாங்கள் பெறும் சேவைகளுக்கு உரிய தொகையினை செலுத்தும் துறைகளே வளர்ச்சியடைந்துள்ளன. இந்த கொள்கையினை நமக்கு நாமே விதித்துக் கொண்ட ஒழுங்கீனமான கவர்ச்சிகரத் திட்டங்களினால் நாம் தலைகீழாக மாற்றி விட்டோம். கவர்ச்சிகரக் கொள்கைகளின் படி மக்கள் தாங்கள் பெறும் சேவைகளுக்கு தொகை செலுத்த வேண்டியதில்லை.
தற்போது பயணிகள் டிக்கெட் மூலம் 57% செலவுகளை ரயில்வே ஈட்டி வருகிறது. அதாவது ஒரு பயணத்திற்கு செலவு அரசுக்கு ரூ.100 என்றால் மக்களிடமிருந்து ரூ.57 பெறப்படுகிறது, மீதி மானியமாகச் செல்கிறது. ரயில்வே துறை ஒரு ஏகபோகத்தை அனுபவித்து வந்தாலும் விமானம் மற்றும் சாலைப் போக்குவரத்து ஆகிய துறைகளுடன் போட்டியிட வேண்டியுள்ளது. இது ரயில்வே வருவாயில் பிரதிபலிக்கிறது. பொதுவாக மக்கள் தாங்கள் பெறும் சலுகைகளை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இந்த அழுத்தத்தினால்தான் நிதியமைச்சகம் ரயில்வே பட்ஜெட்டை தனக்குக் கீழ் கொண்டு வந்தது.
ரயில்வே பட்ஜெட்டிற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது நிபுணத்துவம் தேவைப்படும் பகுதிகளில் கவனம் செலுத்தாது, புதிய ரயில்கள் அறிவிப்பு என்ற கவர்ச்சிகர திட்டங்களில் கவனம் செலுத்துவதாகும். பிரதமர் மோடி இந்த புதியரயில்கள் என்ற கவர்ச்சிகரத்திட்டங்களிலிருந்து, ரயில்வே துறை “ஒரு சேவை அமைப்பு, அது தன்னை வணிக ரீதியாக வளர்த்தெடுத்து தக்கவைத்துக் கொள்வதோடு உலகத்தரம் வாய்ந்த சேவைகளை வழங்குவது” என்பதை நோக்கி நகர வேண்டிய நிர்பந்தத்தை வலியுறுத்தினார்.
விமான நிலையங்கள் சிலவற்றில் உலகத்தரம் வாய்ந்த வசதிகள் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் போது, ஏன் ரயில் நிலையங்கள் அப்படிப்பட்ட வசதிகளைப் பெறக்கூடாது.
ரயில்வே துறையின் திறன் என்பதே ரயில்களை ஓட்டுவதுதானே தவிர ரயில் உணவக சேவை அதன் மையமான திறன் அல்ல. எனவே உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உணவகச் சேவைகளை அவுட் சோர்சிங் செய்வது ரயில்வேயின் போட்டித்திறனை வளர்த்தெடுக்கும்”
இவ்வாறு கூறினார் அருண் ஜேட்லி.