Published : 01 Dec 2022 07:26 PM
Last Updated : 01 Dec 2022 07:26 PM

குஜராத் முதற்கட்ட தேர்தலில் 56.88% வாக்குகள் பதிவு

வரிசையில் நின்று வாக்களித்த குஜராத் வாக்காளர்கள்

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தலில் 56.88% வாக்குகள் பதிவாகி உள்ளன.

குஜராத் சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக 89 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சவுராஷ்டிரா பகுதிகளை உள்ளடக்கிய, 19 மாவட்டங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

தேர்தல் ஆணையம் ஏற்பாடு: இன்றைய தேர்தலில் 2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 670 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இதில் ஒரு கோடியே 24 லட்சத்து 33 ஆயிரத்து 362 பேர் ஆண்கள். ஒரு கோடியே 15 லட்சத்து 42 ஆயிரத்து 811 பேர் பெண்கள். 497 பேர் மூன்றாம் பாலினத்தவர். வாக்காளர்கள் அனைவரும் எளிதில் வாக்களிப்பதற்கு ஏதுவாக மொத்தம் 25,430 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இன்று தேர்தல் நடைபெற்ற 89 தொகுதிகளில், பழங்குடியினருக்கு 14, தலித்களுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இவர்களில் 70 பேர் பெண்கள். 339 பேர் சுயேச்சை வேட்பாளர்கள்.

மும்முனைப் போட்டி: குஜராத்தில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வரும் பாஜக, 7-வது முறையும் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறது. இதுவரை நடந்த தேர்தல்களில் பாஜக, காங்கிரஸுக்கு இடையே இருமுனைப் போட்டி நிலவியது. இந்நிலையில், அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி இந்த முறை தீவிரமாகக் களமிறங்கி உள்ளதால், மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

வாக்களித்த பிரபலங்கள்: மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல், குஜராத் அமைச்சர் பூர்னேஷ் மோடி, முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, குஜராத் பாஜக தலைவர் சி.ஆர். பாடீல், குஜராத் நிதி அமைச்சர் கனுபாய் தேசாய், காங்கிரஸ் மூத்த தலைவர் அர்ஜூன் மோத்வாடியா, ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளரும் கிரிக்கெட் வீரர் ரவீந்தர ஜடேஜாவின் மனைவியுமான ரிவாபா ஜடேஜா, காங்கிரஸ் மூத்த தலைவர் மறைந்த அகமது படேலின் மகள் மும்தாஜ் படேல் உள்ளிட்டோர் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இதேபோல், முதல்முறை வாக்காளர்கள், 100 வயதை எட்டிய மூதாட்டி உள்ளிட்ட வயதான வாக்காளர்கள் என பலரும் இந்த தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்தனர். குஜராத்தைச் சேர்ந்த பிரபுல்பாய் மோர் என்ற இளைஞருக்கு இன்று காலை மகாராஷ்ட்ராவில் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், தனது திருமணத்தை மாலைக்கு தள்ளிவைத்துவிட்டு, காலையில் அவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றி பலரின் கவனத்தை ஈர்த்தார்.

பதிவான வாக்குகள்: காலை 9 மணி நிலவரப்படி 4.92 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவித்த தேர்தல் ஆணையம் காலை 11 மணி நிலவரப்படி 18.95% வாக்குகள் பதிவானதாக தெரிவித்தது. பின்னர் ஒரு மணி நிலவரப்படி 34.48% வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 48.48% வாக்குகளும் பதிவாகின. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், 5 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். மாலை 5 மணிக்குப் பிறகு வாக்குப்பதிவு குறித்து அறிவித்த தேர்தல் ஆணையம், முதற்கட்டத் தேர்தலில் 56.88% வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவித்தது.

தேர்தல் முடிவு: குஜராத்தின் 2ம் கட்டத் தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து, வரும் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. குஜராத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் அன்றைய தினமே வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x