Published : 01 Dec 2022 06:46 AM
Last Updated : 01 Dec 2022 06:46 AM

குஜராத்தில் இன்று முதல்கட்ட தேர்தல்: 89 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு

பிரதிநிதித்துவப் படம்

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக இன்று 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. சட்டப்பேரவையின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. இதையடுத்து, 182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

முதல்கட்டமாக தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சவுராஷ்டிரா பகுதிகளை உள்ளடக்கிய, 19 மாவட்டங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் இன்று (டிச. 1) தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் மாலை 5.30 வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மொத்தம் 25,430 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தேர்தலில் 2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 670 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் ஒரு கோடியே 24 லட்சத்து 33 ஆயிரத்து 362 பேர் ஆண்கள். ஒரு கோடியே 15 லட்சத்து 42 ஆயிரத்து 811 பேர் பெண்கள். 497 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

இன்று தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில், பழங்குடியினருக்கு 14, தலித்களுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 70 பேர்பெண்கள், 339 பேர் சுயேச்சை வேட்பாளர்கள்.

குஜராத்தில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வரும் பாஜக, 7-வது முறையும் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறது. இதுவரை நடந்த தேர்தல்களில் பாஜக, காங்கிரஸுக்கு இடையே இருமுனைப் போட்டி நிலவியது. இந்நிலையில், அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிஇந்த முறை தீவிரமாகக் களமிறங்கி உள்ளதால், மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 93 தொகுதிகளில் வரும் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் வரும் 3-ம் தேதியுடன் ஓய்கிறது.

இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இப்போதைய பாஜக எம்எல்ஏ-க்கள் 42 பேருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால்அதிருப்தி அடைந்த 19 பேர் சுயேச்சையாக களமிறங்கி உள்ளனர். இதில் 9 பேர் முதல்கட்டத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x