கோப்புப்படம்
கோப்புப்படம்

தலித் முஸ்லிம்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து: உச்ச நீதிமன்றத்தில் ஜமியத் உலாமா மனு

Published on

புதுடெல்லி: தலித் முஸ்லிம்களுக்கு எஸ்.சி.அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜமியத் உலாமா-ஐ-ஹிந்த்என்ற அமைப்பு மனு செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் ஜமியத்உலாமா-ஐ-ஹிந்த் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது.

முஸ்லிம் மதம் சமத்துவ கொள்கை அடிப்படையிலானது. இதில் ஜாதிகள் தடை செய்யப்பட்டிருந்தாலும், அதிலும் ஜாதி அமைப்புகள் இருக்கின்றன. முஸ்லிம் மதம் ஜாதிகள் இல்லாதது என்ற அடிப்படையில், 1950-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவில், தலித் முஸ்லிம்கள் எஸ்.சி. பிரிவில் சேர்க்கப்படவில்லை. முஸ்லிம் மதத்தில் பின்தங்கிய வகுப்பினர் ஜாதி அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுகின்றனர்.

இந்து, சீக்கியம், புத்த மதத்தில்உள்ள தலித்கள் எல்லாம் எஸ்.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு சலுகைகளை அனுபவிக்கும் போது, அதே உரிமை தலித் முஸ்லிம்களுக்கு மறுக்கப்படுகிறது. இந்த பாகுபாடு, அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவின் கீழ் விதிமுறை மீறல். தலித் முஸ்லிம்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து மறுக்கப்படுவதால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், அவர்களால் இதர மதங்களில் உள்ள எஸ்.சி .பிரிவினருக்கான இட ஒதுக்கீடு சலுகைகளை பெறமுடியவில்லை. இது வரலாற்று தவறு.

முஸ்லிம்கள் மற்றும் இதர மதத்தினரில் உள்ள பிரிவினருக்கு இடையேயான இடைவெளி அதிகரித்துள்ளது. முஸ்லிம் பட்டதாரிகள் பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர்.

பல மதங்களைச் சேர்ந்த தலித்களில், நகர்ப்புறங்களில் உள்ள 47 சதவீத தலித் முஸ்லிம்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ்உள்ளனர். இந்து மற்றும் கிறிஸ்தவமதங்களில் உள்ள தலித்களைவிட இது அதிகம். கிராமங்களில், 40 சதவீத தலித் முஸ்லிம்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்.

எனவே தலித் முஸ்லிம்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in