

தெற்கு காஷ்மீரின் அன்வாரி பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான 40 மணி நேர துப்பாக்கிச் சண்டை வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்தது.
இந்தக் கடும் சண்டையில் முற்றிலும் சேதமடைந்த 5 வீடுகளின் இடிபாடுகளுக்கு இடையே இருவரின் உடல்கள் மீட்கப்பட்டன. அங்கு ஏகே-47 துப்பாக்கிகள் இரண்டு கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையைக் கண்டித்து அர்வானி பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான மோதலில் சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த மோதலில் பலர் காயமடைந்தனர்.
போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல் நீடித்த சூழலில், அப்பகுதியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. படையினர் கண்ணீர்குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தினர்,
அந்தச் சூழலில், மூடப்பட்ட கடைக்கு முன்பு ஓர் இளம் தந்தை தன் குழந்தைகளுடன் மிக இயல்பாக அமர்ந்திருப்பதையும், அந்தக் குழந்தைகளும் எவ்வித பதற்றமுமின்றி இயல்பாகவே பாதுகாப்புப் படையினரைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் மேலே உள்ள படத்தில் பார்க்கிறோம். இயல்பு மீறிய நிகழ்வுகள் அனைத்தும் அவர்களுக்கு இயல்பு வாழ்க்கையாகவே மாறிவிட்டதை இது காட்டுகிறது.
படங்கள்: நிஸார் அகமது